”பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்” என்பதைக் கருத்தில் கொண்டு, பெண்கள் பொருளாதாரத்தில் சுயசார்ப்பு பெற்றிட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1989ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட சுய உதவிக் குழு இயக்கமானது, இன்று மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்தியாவிற்கே முன்னுதாரணமான சுய உதவிக் குழு இயக்கத்தின் வெற்றியானது பிற மாநிலங்களையும் ஈர்த்து, அங்கும் சுய உதவிக் குழுக்கள் அமைய வழி வகுத்துள்ளது. தமிழ்நாடு துணை முதலமைச்சரின் சீரிய தலைமையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், ஆக்கப்பூர்வமான பல மகளிர் மேம்பாட்டு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. கடந்த நான்காண்டுகளில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கமானது, நகர்ப்புற ஏழைகளிடையே சமுதாயம் சார்ந்த அமைப்புகளை உருவாக்கி, அவர்களின் வறுமையையும், நலிவு நிலையையும் குறைத்து சுய வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுடன் கூடிய வேலை வாய்ப்புகளுக்கு வழி வகுத்து, அதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தினை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்துவதும், நிலைத்த தன்மை அடையச் செய்வதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
மேலும், நகர்ப்புற உறைவிடமற்றோருக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய உறைவிடத்தை ஏற்படுத்தித் தருதல், நகர்ப்புற தெருவோர வியாபாரிகளுக்கு அவர்களின் வியாபாரத்தினை மேம்படுத்துவதற்கு உதவும் வகையில் பொருத்தமான இடம் ஒதுக்கீடு செய்தல், நிதி அமைப்புகள் மூலம் கடன் வசதி ஏற்படுத்துதல், சமூகப் பாதுகாப்பு அளித்தல் மற்றும் திறன் வளர்ப்பு மூலம் வளர்ந்து வரும் சந்தை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட உதவுதல் போன்றவற்றையும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் முக்கிய இலக்காகக் கொண்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான நம்முடைய ‘திராவிட மாடல்’ அரசு அமைந்தது முதல் தற்போது வரை தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற ஏழை மக்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக 14,684 புதிய சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அவைகளில் 4,663 சுய உதவிக் குழுக்களுக்கு 4.66 கோடி ரூபாய் சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது.
சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க புதிதாக 1012 பகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, அவற்றில் 263 பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூபாய் 1.31 கோடி ரூபாய் சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது. சுய வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 6,635 தனி நபர்களுக்கு தொழில் தொடங்க 42.99 கோடி ரூபாய் வங்கிக் கடனும், 3,821 குழுக்களுக்கு தொழில் தொடங்க 152.34 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் செயல்படும் 1,82,274 சுய உதவிக் குழுக்களுக்கு 11800.37 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 9.12 கோடி ரூபாய் மதிப்பில் 15,000 பயனாளிகளுக்கு தொழில்முனைவோர் ஊக்குவிப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்காண்டுகளில் தமிழ்நாடு நகப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சுழல் நிதி மற்றும் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. “ஒன்றே செய், நன்றே செய், அதுவும் இன்றே செய்“ என்ற வாக்கியத்திற்கு ஏற்ப மகளிரின் வாழ்வில் மலர்ச்சியையும், பொருளாதார வளர்ச்சியையும் ஏற்படுத்தி வரும் மகளிர் நல திராவிட மாடல் அரசின் சாதனைகள் எண்ணிலடங்காதவை. மகளிரின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக தன்னலமின்றி அயராது செயலாற்றி வரும் நம் அரசின் செயல்பாடுகளுக்கு நாம் என்றும் துணை நிற்போம்.
The post தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.12,010.79 கோடி சுழல் நிதி மற்றும் வங்கிக் கடன் இணைப்பு appeared first on Dinakaran.