பரீட்சை முடிந்து லீவு விட்டாச்சு என நம் வீட்டுக் கண்மணிகள் ‘அடுத்து எங்கப் போறோம் சத்யா?’ என்பது போல் ஒரு பார்வை வீசுவார்கள். எல்லோருக்கும் வெளிநாடு சுற்றுலா சாத்தியமல்ல. மேலும் இன்னமும் நம் மக்களிடம் வட இந்தியா சுற்றுலாக்கள் எனில் கொஞ்சம் தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. எனில் நம்மூரில் நமக்கருகில் இருக்கும் தென்னிந்திய பிரதேசங்களை சுற்றுவோமே. வெப்பம், புகை ஆகியவற்றிலிருந்து விலகி பெரியவர்களான நாமும் இந்த மலைபிரதேசங்களைத் தேர்வு செய்து டிரிப் அடிப்பது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு கொடுக்கும். மேலும் மீண்டும் ஒரு வருடம் ஓடுவதற்கான சக்தியையும் இந்தச் சுற்றுலாக்கள் கொடுக்கும். தமிழ் நாட்டில் கோடைக்கு குளிர்ச்சியாக எங்கே செல்லலாம்.
ஊட்டி
தமிழ் நாட்டின் மிக முக்கியமான கோடை வாசஸ்தலம். சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. 2240மீ உயரத்தில் அமைந்துள்ள ஊட்டியில், எங்கும் பசுமை, பூஞ்சோலைகள், காடுகள், அருவிகள் என நம் மனதை மயக்கும். பொள்ளாச்சி, கோவை, மேட்டுப்பாளையம் பகுதிகளை இணைக்கும் ரயில்கள் மற்றும் பேருந்துகளைப் பயன்படுத்தி, அங்கிருந்து ஊட்டி 100கி.மீக்கு குறைவாக தனியாக வண்டி அல்லது பொது பேருந்துகள் மூலம் செல்லலாம். ஏரி, ரோஜாத்தோட்டம், தொட்டபெட்டா சிகரம், பைன் காடுகள், தேயிலை தோட்டங்கள், பைகாரா நீர்வீழ்ச்சி, பைகாரா ஏரி, முதுமலை தேசியப்பூங்கா, முக்கூர்த்தி தேசியப்பூங்கா, ஊசி மலைக் கண்ணோட்டம், எமரால்டு ஏரி, மேல்பவானி ஏரி, காமராஜ் சாகர் ஏரி, பனிச்சரிவு ஏரி, அரசு அருங்காட்சியகம், செயின்ட் ஸ்டீபன்ஸ் சர்ச் மற்றும் தாவரவியல் பூங்கா ஆகிய இடங்கள் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும்.
கொடைக்கானல்
கடல் மட்டத்திலிருந்து 2100மீ உயரத்தில் அமைந்துள்ள கொடைக்கானல், மலைகளின் இளவரசி என்றழைப்படுகிறது. அற்புத காலநிலை மற்றும் இயற்கை அழகு மிகுந்து காணப்படும் இந்த இடம், நடுத்தர பட்ஜெட்டில் உயர் மதிப்பிலான சுற்றுலா செல்ல ஏற்ற இடமாக விளங்குகிறது. ரயில்கள், பேருந்துகள் மூலம் திண்டுக்கல், கொடைரோடு அடைந்து அங்கிருந்து தனியார் வண்டிகள், அல்லது பேருந்து மூலம் கோடைக்கானலை அடையலாம். கொடைக்கானல் ஏரி, கோக்கர்ஸ் வாக், பிரயான் பூங்கா, செட்டியார் பூங்கா, குறிஞ்சி ஆண்டவர் கோயில், தூண் பாறைகள், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு கண்ணோட்டம், பேரிஜம் ஏரி, வெள்ளி நீர் வீழ்ச்சி மற்றும் செண்பகனூர் அருங்காட்சியகம் ஆகிய இடங்கள் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கின்றன.
ஏற்காடு
தென்இந்தியாவின் ஆபரணம் என்றும் ஏழைகளின் ஊட்டி என்றும் அழைக்கப்படும் ஏற்காடு, கடல் மட்டத்திலிருந்து 1515மீ உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் குளிர் சூழல், மூடுபனி வானிலை மற்றும் பசுமையான பள்ளத்தாக்குகள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கின்றன. ரயில்கள், பேருந்துகள் மூலம் சேலம் அடைந்து அங்கிருந்து ஏற்காடு வெறும் 35 கி.மீதான். ஏற்காடு ஏரி, லேடீஸ் சீட், கிள்ளியூர் நீர்வீழ்ச்சி, சேர்வராயன் மலைக்கோவில், கரடி குகை, கிரேஞ்ச், ஹெவன் தொங்கு பாறை, பகோடா பாயின்ட், ரோஜாத் தோட்டம் மற்றும் சில்க் பண்ணை ஆகிய இடங்கள் இங்கு பார்க்க வேண்டியவை.
ஏலகிரி
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, ஜோலார் பேட்டை ஊர்களுக்கு ரயில்கள், பேருந்து மூலம் அடையலாம். அங்கிருந்து 21 கி.மீ தான். கடல் மட்டத்திலிருந்து 4600 அடி உயரத்தில் உள்ளது ஏலகிரி. புங்கனூர் அருவியில் படகு சவாரி, கண்ணுக்கு விருந்தாக ஜலங்கம் பாறை அருவி, சாகச விளையாட்டுகளுக்கு பாரா கிளைடிங், மேலும் மலை ஏற்ற வசதிகளும் இருக்கிறது. தரமான தங்கும் விடுதிகளும் உள்ளன.
சிறுமலை
திண்டுக்கல் நகரிலிருந்து 25 கி.மீ தூரத்தில் இருக்கிறது சிறுமலை. பத்தொன்பது கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலையில் பயணம். வாழை, நெல்லி போன்ற கனிகள் நிறைந்த இந்த மலைப் பகுதி கடல் மட்டத்திலிருந்து 5200 அடி உயரத்தில் இருப்பதால் கோடையிலும் காலை, மாலை நேரங்களில் இதமான காலநிலைக்கு உத்தரவாதம் உறுதி. மொத்த மலையுமே சுற்றுலா தளம்தான். எங்கும் வெளியில் செல்லாமல் ஒரு குளிர்ந்த அறைக்குள் நண்பர்கள் குடும்பத்துடன் பொழுதைக் கழிக்கலாம். சில இடங்களில் மொபைல் நெட்வொர்க் கூட கிடைக்காது. நகரத்து வாழ்க்கையில் இருந்து ஒரு சிறந்த ஓய்வு கிடைக்கும்.
கொல்லிமலை
சேலம், திருச்சி நகரங்களிலிருந்து 90 கி.மீ. தூரத்தில் உள்ள அழகிய மலை கொல்லிமலை. மரங்கள் சூழ்ந்த மலை சாலையில் மரங்களின் நிழல்களுக்கு இடையே 72 கொண்டை ஊசி வளைவுகளில் பயணிப்பதே தனி சுகம். 1300 படிக்கட்டுகள் கீழ்நோக்கி அரை மணி நேரம் மலை இறங்கினால் அழகிய ஆகாய கங்கை அருவி. இந்த ஒரு பயணமே திரில்லான அனுபவத்துக்கு உத்தரவாதம். மாசில்லா அருவி என்று மற்றொரு சிறிய அருவியும் குளிக்க உகந்தது. பழங்களின் மலையான இங்கு ருசியான பலா, கொய்யா பழங்கள் கிடைக்கும். தங்குவதற்கு தரமான அரசு குடில்கள் உள்ளன.
கோத்தகிரி
ஊட்டியின் அருகே நீலகிரி மலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து 5800 அடி உயரத்தில் உள்ள மற்றொரு தேயிலை தோட்ட மலை நகரம். கோவையிலிருந்து 66 கி.மீ., மேட்டுப்பாளையத்தில் இருந்து 33 கி.மீ. பயணம். யூகாலிப்டஸ் மரங்களின் நறுமணத்துக்கு இடையே கோடை ஓய்வு. டீ தூள் மற்றும் யூகாலிப்டஸ் தைலம், இங்கே சிறப்பு வியாபாரப் பொருள்.
மேகமலை
மதுரை சந்திப்பிலிருந்து 112கி.மீ, தேனியிலிருந்து 40 கி.மீ ஆங்கிலேயர் காலத்தில் கண்டறியப்பட்டு தேயிலை பயிரிடப்பட்ட தோட்டங்கள் நிறைந்த மலைப் பகுதி மேகமலை. இங்கே நிறைய படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. 5 ஆயிரம் அடி உயரத்தில் மேகக் கூட்டம் இந்த மலை குன்றுகள் மீது தவழ்ந்து செல்வதால் மேகமலை ஆனது. கோடையில் அழகிய நீல வானத்தைப் பார்க்கலாம். ஏரி, நீர் நிலைகள் சூழ்ந்த அழகிய தேயிலை தோட்டங்கள் சூழ்ந்த சுற்றுலா மையம். அதிக பொதுமக்கள் கூடுகை இல்லாத ஊர்.
வால்பாறை
பொள்ளாச்சி சந்திப்பிலிருந்து 60கி.மீ. மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரின் மேற்குச் சரிவில் தமிழக பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் இருக்கிறது. சுற்றிலும் தேயிலை, காப்பி தோட்டங்கள், வானுயர மரங்கள், சோலைகள், அருவிகள், நீரோடைகள், தடுப்பணைகள் என்று பட்ஜெட்டில் வால்பாறை வரவேற்கும்.
– எஸ்.விஜயலட்சுமி.
The post தமிழ்நாடு! : சம்மர் வெகேஷன்! appeared first on Dinakaran.