தமிழ் மொழியை வைத்து தமிழன் ஏமாற்றப்பட்டதுதான் அதிகம்: தமிழிசை சவுந்தரராஜன்

21 hours ago 1

சென்னை,

உலக தாய்மொழி தினத்தையொட்டி பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

இன்று தாய் மொழிகளின் தினம்... நம் தமிழ் மொழியை போற்றுவோம். ஆனால் ஒரு மாநிலத்தில் தாய் மொழியை வைத்து அதிக அரசியல் நடந்தது என்றால் அது தமிழ்நாட்டில்தான். ஆனால் அந்த அளவிற்கு அரசியல்வாதிகள் தமிழை ஆராதித்தார்களா என்றால் தங்கள் குழந்தைகளை கூட தமிழை ஆரத்தழுவ விடவில்லை. ஏன் தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் கூட பெயர் வைக்கவில்லை என்பதே உண்மை. அதனால் தான் நான் அடிக்கடி சொல்வதுண்டு. தமிழ் என் பெயரில் மட்டுமல்ல என் உயிரிலும் உள்ளது.

தமிழக அரசியல்வாதிகள், குறிப்பாக திராவிட மாடல் அரசியல்வாதிகள் மேடைகளில் தமிழைப் பேசிவிட்டு தங்கள் குழந்தைகளை தமிழ் பயிற்று மொழியாக உள்ள பள்ளிகளில் சேர்க்கவில்லை ஆளும் போது கூட தமிழ் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்ற உரிமையை கூட தமிழர்களுக்கு கொடுக்கவில்லை பத்தாவது வரை கல்வி தமிழ் கட்டாயமாக இருக்க வேண்டும் என்பதற்கு இன்று வரை போராடித்தான் வருகிறோம்.

தமிழ் தமிழ் என்று சொல்லி தமிழை ஏற்றம் செய்ததை விட தமிழை வைத்து தமிழகத்தில் தமிழன் ஏமாற்றப்பட்டதுதான் அதிகம். என் அப்பா நான் ஆறாவது வரை தமிழ் வழி கல்விதான் கற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் தமிழ் தமிழ் என்று பேசிக் கொண்டிருந்த அரசியல்வாதிகள் பல பேர் தங்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ் வழி அல்லாத பிரபலமான ஆங்கிலப் பள்ளிகளில்தான் படிக்க வைத்தார்கள். அன்று பாமரனுக்கு ஒரு நீதி தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு நீதி என்றே தமிழை வைத்து தமிழக அரசியல் சுழன்று கொண்டிருந்தது இன்றும் அதே நிலைதான்.

ஆரம்பக் கல்வி முழுவதும் தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்ற வழி வகை செய்யும் புதியகல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள். தாய்வழி தாய்மொழி கல்விக்கு வழிவகை செய்யும் ஒரு திட்டத்தை மொழி திணிப்பு திட்டமாக மடைமாற்றம் செய்கிறார்கள் இதில் தமிழக மக்கள் குறிப்பாக தமிழகப் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்.ஆரம்பக் கல்வி தாய்மொழிக் கல்வியாக இருந்தால் நம் குழந்தைகள் சிறந்த குழந்தைகளாக விளங்குவார்கள் என்பதற்காகத்தான் புதிய கல்விக் கொள்கை ஆரம்பக் கல்வியை தாய் மொழியில் இருக்க வேண்டும் என்று சொல்கிறது.

இன்று வரை தமிழகத்தில் ஆரம்பக் கல்வி தாய்மொழி அல்லாத கல்வி நிலையங்கள்தான் அதிகம் தமிழன் இன்னும் ஏமாற்றப்படக்கூடாது. தமிழுக்காக பேசுபவர்கள் தமிழுக்கு எதிராக பேசுபவர்கள் போலவும் தமிழை அரசியல் ரீதியாக போற்றுகிறோம் என்று ஏமாற்றுபவர்கள் தமிழக குழந்தைகளைப் பயிற்றுவிப்பதிலும் தன் குழந்தைகளைப் பயிற்றுவிப்பதிலும் தமிழை பிரதான படுத்துவதில் தோல்வி அடைந்தவர்கள் ஏதோ தமிழுக்காக அவர்கள் தான் வாழ்பவர்கள் போலவும் ஓர் தவறான தோற்றம் தமிழகத்தில் நிலவுகிறது.

தாய்மொழி தமிழுக்காக பேசுகிறோம் என்று தமிழுக்காக வெளியே பேசுபவர்கள் எத்தனை பேர் தமிழை பிரதானமாக கற்றுக்கொடுக்காத கல்வி நிறுவனங்கள் நடத்துகிறார்கள். தங்கள் பிள்ளைகளை தமிழை பிரதானமாக கற்றுக் கொடுக்காத பள்ளிகளில் படிக்க வைத்தார்கள்... பள்ளிகளில் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். என்பதை ஆராய்ந்தாலே இவர்கள் தமிழை வைத்து தமிழனை எவ்வாறு ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள் என்பது அப்பட்டமாக வெளிப்படும்.

தனிப்பட்ட முறையில் யாரையும் குறிப்பிடுவது என் நோக்கமல்ல ஆனாலும் கலைஞர் தன் மகளுக்கு கனிமொழி என்று பெயர் வைத்துவிட்டு சர்ச் பார்க்கில்தான் படிக்க வைத்தார். பல அரசியல்வாதிகளின் குழந்தைகள் தமிழ் பிரதானமாக அல்லாத மான்போர்ட் பள்ளி போன்ற பள்ளிகளில் தான் படிக்க வைக்கப்பட்டார்கள். தமிழர்களே மறுபடியும் உங்கள் பெயரைச் சொல்லி அரசியலில் ஏமாற்ற திராவிட மாடல் கும்பல்கள் தயாராக இருக்கிறது. தமிழ் மொழியை காப்போம்.. தமிழ் வழி கற்போம்...நம் தமிழ் குழந்தைகளை காப்போம்...நம் தாய்மொழி காப்போம்... நம் உயிர் தமிழ் மொழி காப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article