விழுப்புரம்: “தமிழ் எழுத, படிக்க, பேசத் தெரியாமலேயே பட்டம் பெறலாம் என்கின்ற நிலை இருக்கிறது. இந்த நிலையை மாற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தினார்.
செஞ்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மும்மொழிக் கொள்கை என்பது மோசடி கொள்கை, இரு மொழிக் கொள்கை ஏமாற்றுக் கொள்கை. ஒரு மொழிக் கொள்கையே உன்னத கொள்கை.
உலகத்தில் எல்லா மக்களும் அவரவர்கள் தாய் மொழியில் தான் படிக்கிறார்கள். சிந்திக்கிறார்கள் அறிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கிறார்கள். ஆதலால் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தமிழ்நாட்டில் தாய் தமிழ் மொழி கல்வியைப் பின்பற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். அதேநேரத்தில் உலகை தொடர்பு கொள்ளுகின்ற மொழியாக ஆங்கிலம் இருக்கின்ற காரணத்தினால் ஆங்கிலமும் கற்றுக் கொள்ளலாம். அதில் எந்தவித தடையுமில்லை என்பது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கருத்து.