ஒட்டன்சத்திரம் அருகே தீப்பிடித்து 60 ஏக்கர் மக்காச்சோளம் நாசம்: விவசாயிகள் கவலை

3 hours ago 1

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே தீப்பிடித்து 60 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த ரூ.25 லட்சம் மதிப்பிலான மக்காச்சோள பயிர்கள் எரிந்து கருகி நாசமாகின. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் காய்கறிகள், பருத்தி, மக்காச்சோளம் ஆகியவற்றை விவசாயிகள் பெருமளவில் சாகுபடி செய்து வருகின்றனர். சமீப காலமாக மக்காச்சோளத்திற்கு நல்ல விலை கிடைப்பதால் ஒட்டன்சத்திரம் அருகே, 16 புதூர் பெரியகோட்டை, ரெட்டியபட்டி உள்ளிட்ட பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர். தற்போது பயிர் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை ரெட்டியபட்டி பகுதியில் மக்காச்சோள பயிரில் தீடிரென தீப்பற்றியது. சிறிது நேரத்தில் மளமளவென 60 ஏக்கர் பரப்பளவில் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இது குறித்து ஒட்டன்சத்திரம் தீயணைப்பு துறையினருக்கு விவசாயிகள் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் 10க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சொந்தமான 60 ஏக்கர் மக்காச்சோளப் பயிர்கள் எரிந்து நாசமாகின.

சேத மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மர்மநபர்கள் யாரும் தீ வைத்தார்களா அல்லது சிகரெட், பீடி குடித்துவிட்டு அணைக்காமல் வீசிய நெருப்பால் தீப்பற்றியதா என்பது குறித்து சத்திரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தகவல் அறிந்த உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, கலெக்டர் சரவணன் ஆகியோர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி, அரசு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

The post ஒட்டன்சத்திரம் அருகே தீப்பிடித்து 60 ஏக்கர் மக்காச்சோளம் நாசம்: விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Read Entire Article