கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் போலி குளிர்பானம் விற்பனை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: அதிகாரிகள் தகவல்

2 hours ago 1

வேலூர்: கோடை காலம் தொடங்கி உள்ளதால் போலி குளிர்பானம் விற்பனையை தடுப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை ஆய்வு செய்வதற்கு கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தற்போது தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி குளிர்பானங்கள் மற்றும் காலாவதியான குடிநீர் விற்பனையும் ஆங்காங்கே நடந்து வருகிறது. இதுபோன்ற தயாரிப்புகள் பொதுமக்களுக்கு உடல்நல பாதிப்பை ஏற்படுத்துவதோடு, சிலநேரங்களில் அபாயத்திற்கும் வழிவகுத்து விடுகிறது.

எனவே இதை தடுப்பதற்கு சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக போலி குளிர்பானங்கள் மற்றும் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனையை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்காக குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் வேலூர் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ரயில் நிலையம், கடைவீதி மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் இதுபோன்ற குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: கோடைகாலம் தொடங்கி உள்ளதால் வெளியூர் செல்ல பஸ் நிலையங்களுக்கு வரும் மக்கள் வெயிலில் இருந்து தப்பிக்க அதிகளவு குளிர்பானங்களை பருகுகின்றனர்.

இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சில கடைக்காரர்கள் காலாவதியான குளிர்பானங்களை விற்பனை செய்வார்கள். அதனால்தான் சுகாதார அலுவலர்கள் முதலில் பேருந்து நிலைய கடைகளை குறிவைத்து களம் இறங்கியுள்ளனர். மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால்தான் போலி மற்றும் காலாவதி பொருட்களிடம் இருந்து தப்பிக்க முடியும். குடிநீர் பாட்டில் வாங்கும்போது ஐஎஸ்ஐ முத்திரை, முத்திரைக்கு மேல் பகுதியில் ஐ.எஸ். எண், முத்திரைக்கு கீழ் பகுதியில் சி.எம்.எல். எண்கள் இருக்க வேண்டும். பாட்டிலில் அடைக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி விவரங்களை பார்த்து நுகர்வோர் வாங்க வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

கார்பைடு பழங்களால் பாதிப்பு

மேலும் இந்தகோடை சீசனில், கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்படும் பழங்கள்தான் மிகவும் அச்சுறுத்தக்கூடியது. கார்பைடு கல்லில் இருக்கக்கூடிய அசிட்டிலீன் வாயு மூலம் மா, வாழை போன்றவை 12 முதல் 24 மணி நேரத்துக்குள் பழுக்க வைக்கப்படுகிறது. காய்களில் இயற்கையாக உள்ள எத்திலின் வாயு மூலம் அவை 48 முதல் 72 மணி நேரத்துக்குள் பழுத்து விடும். ஆனாலும், அவசரமாக கல்லா கட்டும் நோக்கத்தில் வியாபாரிகள் பலர் செயற்கையாக பழங்களை பழுக்க வைக்கின்றனர். இதுபோன்று செயற்கையாக பழுக்க வைக்கப்படும் பழங்களை தொடர்ந்து உண்பதன் மூலம் நரம்பு மண்டலம் பாதிக்கும். கல்லீரல், குடல், இரைப்பை பாதிக்கும். குழந்தைகள், முதியவர்கள் இதுபோன்ற பழங்களை அதிகம் உட்கொண்டால் அவர்களுக்கு கடும் வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை ஏற்படலாம்.

பொதுவாக செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் நல்ல கனமாக இருக்கும். தோல் பகுதி வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். தோலை நீக்கி பார்த்தால் உள்ளே காயாக இருக்கும். காம்பு பகுதியில் லேசாக கீறினால் புளிப்பு சுவைக்கான மணம் வீசும். செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை கண்டறியலாம். இதுபோன்ற பழங்கள் விற்பதையும் ஆய்வு செய்து வருகிறோம். செயற்கையான முறையில் மாம்பழம், வாழைப்பழம் போன்றவற்றை பழுக்க வைத்தால் அந்த வியாபாரிகளுக்கு ₹2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

The post கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் போலி குளிர்பானம் விற்பனை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article