தமிழில் மட்டுமே அரசாணைகள்

2 hours ago 2


மக்களுக்கு அரசின் திட்டங்களும், அரசு பிறப்பிக்கும் ஆணைகளும் தமிழ் மொழியில் சென்றால்தான், அதன் பலனை அவர்கள் பெற முடியும். அதனால் தமிழகத்தில் பணியாற்றும் அனைத்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற அகில இந்திய பணி அதிகாரிகள் எல்லோரும் பொதுமக்களிடம் தமிழிலேயே பேச வேண்டும் என்றும் தமிழக அரசு பணித்துள்ளது.

இதனால் தான் அவர்கள் தமிழகத்தில் பணிகளில் சேர்ந்தவுடன் குறிப்பிட்ட சில மாதங்களுக்குள் தமிழில் எழுத, படிக்க கற்றுக்கொண்டு ஒரு தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும் என்ற விதி உள்ளது. இத்தகைய தேர்வை எழுதி தற்போது பணியில் உள்ள வெளிமாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ககன் தீப் சிங் பேடி, ஷில்பா பிரபாகர் சதிஷ், டாக்டர் சந்திர மோகன் உள்ளிட்ட பல அதிகாரிகள் பேசும் தமிழைப் பார்த்தால் அவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களோ? என்று சந்தேகப்படும் வகையில் இருக்கும்.

பாமர மக்கள் உயர் அதிகாரிகளை சந்திக்கும்போது, அவர்கள் தமிழில் பேசி தங்கள் குறைகளைத் தெரிவிக்க, அதற்கு அதிகாரிகளும் தமிழிலேயே பதிலளித்தால் நன்றாக இருக்கும். இந்த சூழ்நிலையில், அரசு பிறப்பிக்கும் சில ஆணைகள் ஆங்கிலத்தில் இருப்பதாக ஒரு குறை இருந்து வந்தது. இந்தக் குறையை போக்க, தமிழக அரசு சமீபத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி, அனைத்து அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ் மொழியைப் பயன்படுத்தவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு சில அறிவுறுத்தல்களையும் தமிழக அரசு பட்டியலிட்டுள்ளது.

முதலாவதாக அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும். சுற்றாணைக் குறிப்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும், துறைத் தலைமை அலுவலகங்களில் இருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும். வெளியிடப்படும் கடிதங்கள், அலுவலக ஆணைகள் மற்றும் இதர கடித போக்குவரத்துகள் ஆகியவை விலக்களிக்கப்பட்ட இனங்கள் தவிர எல்லா இனங்களிலும் தமிழில்தான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களிடம் இருந்து தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழில் தான் பதில் எழுத வேண்டும். அதுபற்றிய குறிப்புகளும் தமிழிலேயே இருக்க வேண்டும். அரசு பணியாளர்கள் தமிழிலேயே கையெழுத்திட வேண்டும்.

அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவுகள், பொதுமக்களுக்கு அரசோடு தமிழில் தொடர்பு கொள்ளவும், அரசிடம் இருந்து வரும் பதிலும் தமிழிலேயே இருக்கும் என்பதால் அதையும் நன்கு புரிந்து கொள்ளவும் ஏதுவாக இருக்கும்.

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி, "வழக்கமாக தமிழகத்தில் இருந்து எனக்கு நிறைய கடிதங்கள் வருவது உண்டு. இதில் அனைத்து விஷயங்களும் ஆங்கிலத்தில் இருக்கும். இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் கையெழுத்தும் ஆங்கிலத்தில் இருக்கிறது. குறைந்த பட்சம் கையெழுத்தையாவது தமிழ் மொழியில் போட்டு இருக்கலாமே? என்று நான் வியந்தது உண்டு'' என்று பேசினார்.

எனவே இனி தமிழ்நாட்டில் இருந்து மத்திய அரசாங்கத்துக்கு செல்லும் அனைத்து கடிதங்களிலும் அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லோருமே தமிழில் கையெழுத்திட்டு அனுப்பவேண்டும். இது பிரதமரின் விருப்பம் என்பதால் மக்களும் தாங்கள் பிரதமருக்கும், மத்திய அரசாங்கத்துக்கும் அனுப்பும் அனைத்து கடிதங்களிலும் தமிழிலேயே கையெழுத்திட வேண்டும்.

Read Entire Article