
மதுரை,
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், கொடைக்கானலில் 5 நாட்கள் படப்பிடிப்பை முடித்து கொண்டு நேற்று மதியம் 12 மணிக்கு மதுரை விமான நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார். முன்னதாக விஜய் மதுரை விமான நிலையத்திற்கு உள்ளே செல்ல முயன்றபோது திடீரென்று ரசிகர் ஒருவர் பாதுகாப்பை தாண்டி விஜய் அருகே செல்ல முயன்றார். இதை பார்த்த மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புக்காக துப்பாக்கியை எடுத்து அந்த ரசிகரின் தலையில் வைத்து விசாரித்தனர்.
அதில், அவர் விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் இன்பராஜ் என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், இன்பராஜ் அளித்த பேட்டியில்,
"தலையில் துப்பாக்கி வைத்தது தற்செயலாக நடந்தது. அவர் பாதுகாப்பிற்காக என் மீது துப்பாக்கி வைத்திருக்கிறார். அதில் ஒன்றும் தவறில்லை. அதை நான் மகிழ்ச்சியாகதான் எடுத்துக்கொள்கிறேன். ஆனால் அது பற்றி எனக்கு அப்போது தெரியாது. வீட்டிற்கு வந்தபின்புதான் கேள்வி பட்டேன்.
இதுவரை எங்கள் தலைவரின் பாதுகாப்பிற்காக நாங்கள்தான் செல்வோம். கைகளால்தான் தடுப்போம். ஆனால், இப்போது துப்பாக்கியை வைத்து தடுத்து தலைவரை பாதுகாப்பாக அழைத்து செல்கிறார்கள். அது எங்களுக்கு மிகவும் சந்தோஷம். என்னை துப்பாக்கி வைத்து சுட்டு இருந்தாலும் தளபதிக்காக மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வேன்" என்று கூறினார்