ரோகித்தை இம்பேக்ட் வீரராக மட்டும் களமிறக்குவது ஏன்..? - ஜெயவர்தனே விளக்கம்

2 hours ago 2

மும்பை,

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் பெங்களூரு, பஞ்சாப், மும்பை, குஜராத் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.

நடப்பு தொடரின் தொடக்க ஆட்டங்களில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்த மும்பை அணி கடைசியாக ஆடிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா நடப்பு தொடரின் தொடக்க ஆட்டங்களில் சிறப்பாக ஆடவில்லை. ஆரம்பகட்ட போட்டிகளில் பெரிய ரன்கள் குவிக்காத ரோகித் சர்மா ஓய்வு பெறுமாறு விமர்சனங்களை சந்தித்தார்.

இருப்பினும் அதற்கெல்லாம் கவலைப்படாத அவர் சமீபத்திய போட்டிகளில் 3 அரை சதங்கள் அடித்து மீண்டும் பார்முக்கு வந்துள்ளார். இத்தொடரில் பெரும்பாலான போட்டிகளில் ரோகித் சர்மாவை மும்பை நிர்வாகம் வெறும் இம்பேக்ட் வீராராக மட்டும் பயன்படுத்தி வருகிறது. இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

இந்நிலையில், ரோகித் சர்மாவை இம்பேக்ட் வீரராக மட்டுமே களமிறக்குவது ஏன் என்பது குறித்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனே விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ரோகித்தை ஆரம்பம் முதலே அவ்வாறு பயன்படுத்தவில்லை. எங்களுடைய அணியில் நிறைய வீரர்கள் 2 வேலைகளை செய்கிறார்கள். அவர்களில் பலர் பவுலிங் செய்கின்றனர்.

சில மைதானங்களில் பவுண்டரி எல்லையில் வேகமாக ஓடக்கூடியவர்கள் தேவைப்படுகிறார்கள். அந்த விஷயம் இந்த முடிவில் முக்கிய பங்காற்றுகிறது. மேலும், சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் லேசான காயத்தைச் சந்தித்தார். எனவே, அவரை நாங்கள் வேகமாகத் தள்ள விரும்பவில்லை.

எனவே, அவருடைய பேட்டிங் வைத்து நாங்கள் அனைத்தையும் நிர்வகிக்கிறோம். அதே சமயம் தமக்கு கிடைக்கும் வேலைகளில் ரோகித் அற்புதமாக பங்காற்றி வருகிறார். ஒட்டுமொத்தமான திட்டம் என்னவெனில் எங்களுக்கு பவுலிங் ஆப்ஷன்கள் மற்றும் பீல்டர்கள் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article