தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் இன்று சிறப்பு காய்ச்சல் முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

3 months ago 16


சேலம்: தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மழைக்கால காய்ச்சல் முகாம் இன்று நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சேலம் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட 21 மருத்துவ கட்டிடங்களை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையுடன் ஊரக வளர்ச்சித்துறை, உள்ளாட்சித்துறை, பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைந்து அனைத்து மாவட்டங்களிலும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது எப்படி, நோய் பாதிப்புகளை தடுப்பது எப்படி என்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில், ஏதாவது ஒரு கிராமத்தில் ஒருவருக்கு மேல் காய்ச்சல் இருந்தால் கூட, அந்த கிராமத்தில் காய்ச்சல் முகாம் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக மழைக்காலம் என்பதால் மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 1000 இடங்களில் சிறப்பு மழைக்கால காய்ச்சல் முகாம் 15ம் தேதி (இன்று) நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை நடப்பாண்டில் டெங்கு காய்ச்சலால் இதுவரை 8 பேர் இறந்துள்ளனர். தமிழக மருத்துவ பணிகள் கழகம் மூலம் 300க்கும் மேற்பட்ட மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. விநியோகம் இல்லாதபோது காப்பீடு பணத்தில் தேவையான மாத்திரைகள் வழங்க வாய்மொழி உத்தரவு தரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்காடு டூ சேலம் 30 கி.மீ. வாக்கிங்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்றுமுன்தினம் இரவு ஏற்காட்டில் தங்கினார். நேற்று அதிகாலை 5 மணிக்கு பனியும், மழைத்தூறலும் விழுந்து கொண்டிருந்த நேரத்தில் வாக்கிங் புறப்பட்டார். கொண்டை ஊசி வளைவு மெயின்ரோடு வழியாக அவர் ஓட்டமும், நடையுமாக சேலம் அடிவாரம் வரை சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தை 3 மணி நேரத்தில் கடந்து வந்தார். அதன்பிறகு காரில் ஏறி, ஆய்வு மாளிகைக்கு சென்றார்.

The post தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் இன்று சிறப்பு காய்ச்சல் முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article