தமிழக மக்கள் மத்தியில் எப்படியாவது இந்தியை திணித்து விடுவது என்ற முடிவோடு ஒன்றிய அரசு கடந்த 10 ஆண்டுகளாகவே செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்தே இந்தி மொழியை எப்படியாவது தேசிய மொழியாக மாற்றிட வேண்டும் என்கிற முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர். சில மாநிலங்கள் அதற்கு செவிசாய்த்தும் விட்டன. தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டுமே இன்னமும் துடிப்போடு, ஒன்றிய அரசிடம், மாநில சுயாட்சிக்காக மல்லுக்கட்டி வருகின்றன.
இப்போது ஒன்றிய அரசு சமக்ர சிக்சா அபியான் திட்டத்தில் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியை நிறுத்தி, தமிழகத்தில் இந்தியை திணிக்க முற்படுகிறது. இத்திட்டத்தில் தமிழகத்திற்கு வரவேண்டிய ரூ.2 ஆயிரத்து 152 கோடி நிதி இதுநாள் வரை வழங்கப்படவில்லை. தேசிய கல்வி கொள்கையின்படி இந்தியாவில் உள்ள மாநிலங்கள் தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் 3வது மொழியாக இந்தியை ஏற்றுக் கொண்டுள்ள சூழலில், தமிழ்நாடு மட்டுமே் இதனை ஏன் ஏற்க மறுக்கிறது என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி எழுப்பியுள்ளார்.
3வது மொழியை ஏற்கும் வரையில் தமிழகத்திற்கு நிதி வழங்க முடியாது என ‘பிளாக்மெயில்’ பாணியில் ஒன்றிய அமைச்சர் பேசியிருப்பது பலரது கண்டனத்தையும் பெற்றுள்ளது. தமிழகத்தின் இந்தி எதிர்ப்பு வரலாறு, ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தெரிய வாய்ப்பில்லை. 1937ம் ஆண்டு தொடங்கி மதராஸ் மாகாணத்தில் இந்தியை விதைக்க முயன்றபோது, இங்கு ஏற்பட்ட மாணவர்கள் எழுச்சியும், சிறை நிரப்பும் போராட்டங்களும் வரலாற்றில் இன்றும் இடம் பெற்றுள்ளன.
பிரிட்டிஷ் அரசாங்கமே தமிழகத்தில் இந்தி கட்டாயம் என்ற உத்தரவை வாபஸ் பெற்றுக் கொண்டது. 1965ம் ஆண்டில் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக களம் இறங்கியபோது, அதனோடு கைகோர்த்து மாணவர்களும், இளைஞர்களும் திரண்டனர். இறுதியில் தமிழகம் ஆட்சி மாற்றத்தையே எதிர்கொண்டது. 1986ம் ஆண்டில் கூட ஒன்றிய அரசின் அலுவலகங்களுக்கு கடிதங்கள் அனைத்தும் இந்தியில் வரும், இந்தியா முழுவதும் நவோதயா பள்ளிகள் திறக்கப்படும் உள்ளிட்ட உத்தரவுகளை களத்தில் நின்று போராடியே தடுத்து நிறுத்திய பெருமை தமிழ் மக்களுக்குண்டு.
இப்போது மீண்டும் ஒன்றிய கல்வி அமைச்சர் மும்மொழி கொள்கை என்ற பெயரில் முருங்கை மரம் ஏற தொடங்கியுள்ளார். இத்தகைய பிளாக்மெயிலுக்கெல்லாம் தமிழகம் அடிபணியாது என கூறியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘உங்கள் தனிச்சொத்தை கேட்பது போல் திமிராக பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியது வரும்’ என எச்சரித்துள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்தவொரு பிரிவிலும் மும்மொழி கொள்கை இடம் பெறாதபோது, ஒன்றிய அரசு தான் முடித்த முயலுக்கு 3 கால்கள் எனக்கூறி மும்மொழியை திணிக்க அடம் பிடிக்கிறது.
இந்திய ஒன்றியம் என்பது மாநிலங்களால் ஆனது என்பதை ஒன்றிய அரசும், அதன் ஆட்சியாளர்களும் அடிக்கடி மறந்து விடுகின்றனர். இந்தியை எதிர்க்க தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டிய நேரத்தில், அதிமுக வழக்கம்போல் அடக்கியே வாசிப்பதும் பொதுமக்கள் மத்தியில் விவாத பொருளாக மாறி வருகிறது. மாநிலத்தின் உரிமையை காக்க அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டிய நேரமிது.
The post தமிழகம் அடிபணியாது appeared first on Dinakaran.