தமிழ்நாட்டில் மண், மொழி, மானம் காக்க மக்களை ஒன்று திரட்டுவதே நோக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

5 hours ago 2

சென்னை; திமுக உறுப்பினர் சேர்க்கைக்கான ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர்; ஓரணியில் தமிழ்நாடு என்ற மகத்தான முன்னெடுப்பை திமுக சார்பில் தொடங்கி வைத்துள்ளேன். ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை, தேர்தல் பரப்புரை, ஒன்றிய அரசு வஞ்சிப்பது தொடர்பான விளக்கங்கள் இருக்கும். இன்று முதல் 45 நாட்கள் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு நடைபெறுகிறது. நாளை ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. ஜூலை 3 முதல் தமிழ்நாடு முழுவதும் வீடு, வீடாக சென்று மக்களை சந்திக்க உள்ளோம்.

அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், திமுகவினர் அவரவர் சொந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வீடுகளில் சென்று சந்திக்க உள்ளனர். தமிழ்நாட்டில் மண்,மொழி, மானம் காக்க மக்களை ஒன்று திரட்டுவதே நோக்கம். ஒன்றிய பாஜக அரசால் தமிழ்நாடு, தமிழ் பாதிக்கப்பட்டுள்ளது. அறிவியல், பண்பாடு, மொழி என எல்லாவற்றிலும் தமிழ்நாட்டுக்கு எதிராக ஒன்றிய அரசு செயல்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து வசூலிக்கப்படும் வரியை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தருவதில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு உரிய நிதி தருவதில்லை.

தமிழ்நாட்டுக்கு சிறப்பு திட்டங்களை ஒன்றிய அரசு தரவில்லை. கல்விக்கான நிதியை ஒன்றிய அரசு தருவதில்லை. தேசிய கல்விக்கொள்கை இந்தி திணிப்பு கொள்கையாக மட்டுமே உள்ளது. நீட் தேர்வு மூலம் கிராம புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கீழடி அறிக்கையை வெளியிடாமல் தமிழரின் வரலாற்றை ஒன்றிய அரசு மறைக்க முயல்கிறது. தமிழரின் வரலாற்று பெருமை கீழடி அறிக்கையை ஒன்றிய அரசு வெளியிடவில்லை. தமிழ்நாட்டின் எம்.பி. தொகுதிகளை குறைக்க ஒன்றிய அரசு திட்டம் தீட்டி வருகிறது. நான் முன் வைக்கும் விமர்சனங்கள் எல்லாம் தமிழ்நாட்டின் உரிமை பிரச்சனை.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் அனைவர் வீட்டிலும் சென்று சந்திக்க உள்ளோம். தமிழ்நாட்டில் மண், மொழி, மானம் காக்க மக்களை ஒன்று திரட்டுவதே நோக்கம். தமிழ்நாட்டை எப்படி எல்லாம் ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர வேண்டும். தமிழ்நாட்டின் மீதான பொருளாதார போரை எதிர்கொள்ள நெஞ்சுரம் மிக்க அரசியல் சக்தி தேவை. கட்சிகளை தாண்டி தமிழ்நாட்டுக்காக தமிழ்நாடு ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; லாக்அப் மரணம் பற்றி தகவல் அறிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; 2026 சட்டமன்ற தேர்தலுக்கு திமுக தயாராக உள்ளது, தயாராகி நீண்ட நாட்களாகிவிட்டது. எடப்பாடி பழனிசாமி இப்போதுதான் மக்களை சந்திக்க போகிறார், நாங்கள் தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறோம். 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம். கூடுதல் கட்சிகள் திமுக கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது என்று கூறினார்.

The post தமிழ்நாட்டில் மண், மொழி, மானம் காக்க மக்களை ஒன்று திரட்டுவதே நோக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article