300 எல்டிசி, யுடிசி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை புதிதாக 10 ஆயிரம் பேருக்கு பென்ஷன் வழங்கப்படும்

4 hours ago 2

*முதல்வர் ரங்கசாமி தகவல்

புதுச்சேரி : புதுச்சேரியில் முதியோர் உதவித்தொகை பெற புதிதாக விண்ணப்பித்த அனைவருக்கும் விரைவில் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி கூறினார்.

புதுச்சேரி உள்ளாட்சித்துறையின் உழவர்கரை நகராட்சி மூலமாக புதுமை ஒருங்கிணைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான நகர முதலீடுகள் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.16.72 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்ட திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா நேற்று பாவாணர் நகரில் உள்ள பூங்காவில் நடந்தது.

இதில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தனர். இவ்விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:

வீடற்றவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. அவர்களுக்கு விரைவில் வீடுகள் ஒதுக்கப்படும். கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு மனைபட்டா வழங்கப்படும். இதேபோல், நகர்ப்புறத்தில் வசிப்பவர்களுக்காக அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி துவங்கவுள்ளோம்.

காமராஜர் வீடு கட்டும் திட்டத்தை சிறப்பான முறையில் மீண்டும் துவங்கவுள்ளோம். இதன் மூலம் வீடு கட்ட ரூ.5 லட்சம் நிதி கிடைக்கும். மருத்துவ படிப்பை போல் அனைத்து படிப்புகளிலும் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தனி நபர் வருமானம் உயர்ந்துள்ளது.

ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்களை வழங்குவதில் புதுச்சேரி சிறப்பாக உள்ளது. புதுவையில் அரசின் சலுகைகள் பெறாத ஒரு குடும்பமும் இல்லை எனலாம். சிவப்பு ரேஷன் கார்டு உள்ள குடும்ப தலைவிகளுக்கு உதவித்தொகை ரூ.1000ல் இருந்து ரூ.2,500 ஆகவும், மஞ்சள் ரேஷன் கார்டு உள்ள குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 என உதவித்தொகை வழங்க உள்ளோம்.

முதியோர் உதவித்தொகை 55 வயதுக்கு மேல் அனைவரும் பெறுகின்றனர். புதிதாக 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜூலையில் விண்ணப்பித்த அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும்.

ஏற்கனவே அறிவித்தபடி ரேஷன்கடைகளில் அரிசியுடன் கோதுமையும் விரைவில் வழங்கப்படும் சிலர் நிறைய குறைகளை சொல்லுவார்கள். அப்போது நான் நினைத்து பார்ப்பதுடன், கடந்த ஆட்சியில் என்ன செய்தார்கள். அரசே போராட்டம் நடத்தி கொண்டு இருந்தது. திட்டத்தை செயல்படுத்தாமல் நாட்களை வீணடித்தார்கள்.

இப்போது கவர்னரும், அரசும் இணைந்து தினமும் எத்தனையோ திட்டங்களை செயல்படுத்துவதை பார்க்கலாம். கடந்த 5 ஆண்டுகால ஆட்சியும், இப்போதைய ஆட்சியும் எப்படி இருக்கிறது என்பதை ஒரு கண்காட்சி போல் வைத்தால் தெரியும். இதை செய்ய வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறோம்.

256 அசிஸ்டென்ட் பணியிடங்கள் நிரப்ப தேர்வு நடத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் எல்டிசி, யுடிசி என 300 பேருக்கு மேல் எடுக்க போகிறோம். காவல்துறையில் 1,000 பேருக்கு மேல் வேலை கொடுத்துள்ளோம். படித்த இளைஞர்களுக்கு அரசு மூலமாக வேலை கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் எத்தனை பேருக்கு வேலை கொடுத்தார்கள். நிறைய ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப உள்ளோம். இந்த ஆட்சியில் அரசு பணிக்கு 5 ஆயிரம் இளைஞர்கள் சென்றிருப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தியுள்ளதால் கனமழையிலும் 2 மணிநேரம் கூட தண்ணீர் நிற்கவில்லை

மேலும் முதல்வர் பேசுகையில், இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கி புதுச்சேரியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். பாவாணர் நகரில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவது பிரச்னையாக இருந்து வந்தது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தற்போது மேட்டு வாய்க்கால், பள்ளவாய்க்கால் கட்டும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

முக்கிய சாலைகளில் 5 நாட்கள் வரை மழைநீர் வடியாமல் இருப்பதை பார்த்துள்ளோம். இப்போது வாய்க்காலில் அடைப்புகள் இருந்தாலும், சாலையில் 2 மணி நேரம் கூட தண்ணீர் நிற்கவில்லை என்று கூறும் நிலையை கொண்டு வந்துள்ளோம். ரெயின்போ நகரில் மழைநீர் தேங்காமல் இருக்க ரூ.12 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கும் எல்லா இடங்களையும் சரி செய்துள்ளோம். சாலைகளை மேம்படுத்தியுள்ளோம் என்றார்.

The post 300 எல்டிசி, யுடிசி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை புதிதாக 10 ஆயிரம் பேருக்கு பென்ஷன் வழங்கப்படும் appeared first on Dinakaran.

Read Entire Article