சென்னை: தமிழகத்தில் வரும் 5ம்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு மே 4ம் தேதி கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கத்திரி வெயில் எப்போது தொடங்கியதோ அன்று முதல் அவ்வப்போது மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைவாகவே காணப்பட்டது. இந்நிலையில் கத்திரி வெயில் கடந்த மே மாதம் 28ம் தேதி முடிந்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அதாவது கோடை வெயிலை மிஞ்சும் அளவுக்கு கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர். குறிப்பாக நேற்று தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதம் அடித்தததால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104.36 டிகிரி பாரான்ஹீட் வெப்பம் பதிவானது.
வெயில் தாக்கம் ஒருபுறம் இருந்தாலும் அவ்வப்போது மிதமான மழையும் பெய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வரும் ஜூலை 5ம்தேதி வரை தமிழகத்திலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளது. அதேபோன்று, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
The post தமிழகத்தில் வரும் 5ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.