பால பணி காரணமாக நாகர்கோவில் வந்த ரயில்கள் தாமதம் : சூரிய உதயம் காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

3 hours ago 2

நாகர்கோவில்: நாகர்கோவில் ஊட்டுவாழ்மடத்தில் நடந்து வரும் பால பணிகள் காரணமாக, இன்றும் கன்னியாகுமரி மற்றும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள், தாமதமாக நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தன. நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் நடக்கின்றன. இதன் ஒரு கட்டமாக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலாக விளங்கும், ஊட்டுவாழ்மடத்தில் பழையாற்றின் மேல் உள்ள ரயில்வே பால கட்டுமான பணிகள் நடக்கின்றன. இந்த பணிகள் காரணமாக, நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்குள் ரயில்களை உள் வாங்குவதில் தாமதம் ஏற்படுகின்றன. கடந்த 5ம்தேதி இந்த பணி காரணமாக, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் தாமதம் ஆனது. இந்த நிலையில் நேற்று இரவும், ஊட்டுவாழ்மடத்தில் பணிகள் நடந்தன. இந்த பணிகள் இன்று அதிகாலை வரை நீடித்தது.

இதனால் இன்றும் நாகர்கோவில் வந்த சென்னை, கோவை ரயில்கள் தாமதம் ஆனது. அதிகாலை 4.45 க்கு வர வேண்டிய சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி இடையே இயங்கும் கன்னியாகுமரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில், காலை 6.30க்கு தான் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வந்தது. பின்னர் காலை 6.36க்கு, கன்னியாகுமரி புறப்பட்டு சென்றது. அதிகாலை 5.30க்கு கன்னியாகுமரி செல்ல வேண்டிய ரயில், காலை 7.03க்கு தான் கன்னியாகுமரி சென்றது. கன்னியாகுமரியில் நடக்கும் சூரிய உதயத்தை காண, இந்த ரயிலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஆனால் இன்று ரயில் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக கன்னியாகுமரிக்கு சென்றதால், சூரிய உதயத்தை காண முடியாமல், ரயிலில் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதே போல் கோவையில் இருந்து அதிகாலை 4.40க்கு நாகர்கோவில் சந்திப்பு வர வேண்டிய கோவை எக்ஸ்பிரஸ் ரயில், காலை 5.25க்கு தான் நாகர்கோவில் வந்தது. பெங்களூரில் இருந்து நாகர்கோவில் வர வேண்டிய பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலும், சுமார் 25 நிமிடங்கள் தாமதம் ஆனது. இந்த ரயில்கள் ஆரல்வாய்மொழி, பணகுடி அருகே ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் சென்னையில் இருந்து நாகர்கோவில் டவுன் வழியாக, கொல்லம் வரை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில், காலை 7.30க்கு பதிலாக காலை 8.12க்கு தான் டவுன் ரயில் நிலையம் வந்தது. இதே போல் காலை 7.55க்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில் – திருவனந்தபுரம் பயணிகள் ரயில், காலை 8.24க்கு தான் புறப்பட்டது. காலை 9 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில் சந்திப்பு – புனே ரயில், 9.20க்கு தான் புறப்பட்டது. ரயில்கள் தாமதம் காரணமாக பயணிகள் பாதிப்படைந்தனர்.

The post பால பணி காரணமாக நாகர்கோவில் வந்த ரயில்கள் தாமதம் : சூரிய உதயம் காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article