சென்னை : தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் குடும்ப நல நீதிமன்றங்களில் 33,000 வழக்குகள் தேங்கி இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குடும்ப வழக்குகளின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளது. வழக்குகளை குறைக்கும் விதமாக சென்னையில் குடும்ப நல நீதிமன்றங்களின் எண்ணிக்கை 4ல் இருந்து 8 ஆக உயர்த்தப்பட்டாலும் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 40 குடும்ப நல நீதிமன்றங்களில் விவாகரத்து, ஜீவனாம்சம், இணையருடன் சேர்த்து வைக்க கோருதல், மனமுத்த விவகாரத்து போன்ற 33,213 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 17,638 வழக்குகள் இந்த ஆண்டு தொடரப்பட்டவை. நிலுவையில் இருந்த வழக்குகளில் இந்த ஆண்டில் மட்டும் 19,240 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் விவாகரத்து கோரி தொடரப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்திருப்பது தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. 2024ம் ஆண்டில் மட்டும் 5,500க்கும் அதிகமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.இந்தியாவில் விவாகரத்து கோருவோரில் சுமார் 50% 25-35 வயது உடையோர் ஆவர். 18 – 25 வயது உடையோர் 35%மும், 35 வயதிற்கும் மேற்பட்ட 15% பேர் விவகாரத்து கோரியுள்ளனர் என்கிறது புள்ளி விவரம். திருமணத்தை ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தை நாடுவோரில் 60-70% வரை பெண்கள் என்கிறார்கள் வழக்கறிஞர்கள். இதற்கு குடும்ப வன்முறை, சுதந்திர சிந்தனை, திருமணத்தை மீறிய பந்தம், சகிப்புத்தன்மையின்மை, உளவியல், பாலியல் ரீதியான பிரச்சனைகள் என்ற காரணங்களையும் அவர்கள் பட்டியல் இடுகின்றனர். இருப்பினும் முறிந்த மனங்களை தழைக்க வைக்கும் நீதிமன்ற முயற்சிகளுக்கு ஒத்துழைக்காமல் பிடிவாதத்தால் பலர் வாழ்க்கையை தொலைத்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.
The post தமிழகத்தில் மட்டும் குடும்ப நல நீதிமன்றங்களில் 33,000 வழக்குகள் தேக்கம் : சென்னையில் 2024-ல் விவாகரத்து கோரி 5,500 பேர் மனு!! appeared first on Dinakaran.