'தமிழகத்தில் பிராமணர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்வது தவறு' - கஸ்தூரி பேச்சுக்கு எஸ்.வி.சேகர் கண்டனம்

2 months ago 14

சென்னை,

இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு பேசும்போது, தெலுங்கு மக்கள் தொடர்பாக தெரிவித்த கருத்துகள் சர்ச்சையானது. இதற்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்தது. பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்தன. இதனிடையே நடிகை கஸ்தூரி தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

இந்த நிலையில், தமிழகத்தில் பிராமணர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கஸ்தூரி கூறியது தவறு என நடிகர் எஸ்.வி.சேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"நடிகை கஸ்தூரியின் பேச்சு மிகவும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் பிராமணர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்வது தவறு. தமிழகத்தில் சுமார் 10 கோடி பேர் இருக்கிறார்கள். சில இடங்களில் குடும்ப உறுப்பினர்களே ஒருவரை ஒருவர் கொலை செய்கின்றனர். அதற்காக தமிழகம் முழுவதும் அவ்வாறு நடக்கிறது என்று கூற முடியுமா?

ஒரு இடத்தில் நடப்பதை பொதுப்படையாக்க முயற்சிக்க கூடாது. இனப்படுகொலை என்ற வார்த்தையை சில மாதங்களுக்கு முன்பு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசினார். எனவே, அதைப் பற்றி பேசினால் பா.ஜ.க.வில் அண்ணாமலை தனக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பார் என நினைத்து கஸ்தூரி பேசியுள்ளார். ஆனால் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் கதவு கஸ்தூரிக்கு மூடப்பட்டது. ஆந்திராவிலும் அவர் மீது வழக்கு தொடுத்துள்ளனர். இனி கஸ்தூரி தனியாக கட்சி ஆரம்பித்து என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம்."

இவ்வாறு எஸ்.வி.சேகர் தெரிவித்தார். 

Read Entire Article