சென்னை,
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக தமிழகத்தில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் 250 பேர் வருகிற 29-ந் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று குடியுரிமைத்துறை அதிகாரிகள் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுடனான அனைத்து உறவையும் இந்தியா துண்டித்துள்ளது. இதையடுத்து தங்கள் நாட்டில் இருக்கும் இந்தியர்கள் வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தானும், அதேபோன்று இங்கு தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என்று நம் நாடும் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை தொடர்ந்து 'சார்க்' அமைப்பு மூலமாகவும், கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சைக்காகவும் விசா பெற்று வந்து, தங்கி உள்ளவர்களின் விவரங்களை மத்திய உளவுப்பிரிவு போலீசாரின் ஆலோசனையின் பேரில் குடியுரிமை துறை அதிகாரிகள் கணக்கெடுத்து சம்மன் அனுப்பி வெளியேற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 250 பாகிஸ்தானியர்கள் தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் 15 பேர் சென்னையில் தங்கி உள்ளனர். அவர்களில் 2 பேர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். சார்க் அமைப்பு மூலம் 215 பேர் விசா பெற்று வந்துள்ளனர். மற்றவர்கள் திருமணம் விவகாரம் தொடர்பாக வந்து தங்கி உள்ளனர். அவர்கள் அனைவரும் வருகிற 29-ந் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று குடியுரிமைத்துறை அதிகாரிகள் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் வெளியேறுகிறார்களா? என்பதை மாநில உளவுப்பிரிவு போலீசார் உதவியோடு குடியுரிமைத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.