
ஐதராபாத்,
நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது.
'ரெட்ரோ' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. ரெட்ரோ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்திராக நடிகர் விஜய் தேவரகொண்டா கலந்துக் கொண்டார்.
அதில் நடிகர் சூர்யா கூறியதாவது "நானிக்கு சூர்யாவின் சனிக்கிழமை, கோர்ட் திரைப்படத்தை தொடர்ந்து 'ஹிட் 3' திரைப்படமும் வெற்றியடையட்டும். நானி கூறியதைப் போல் மே 1 பார்ட்டி போல் இரண்டு திரைப்படங்களையும் கொண்டாடுவோம். மேலும் வீழ்வதில் தோல்வி இல்லை வீழ்ந்து எழாமல் இருப்பதுதான் தோல்வி. நான் மீண்டும் எழுந்து சண்டைக்கு தயாராகி இருக்கிறேன்" என கூறியுள்ளார்.
நானியின் 'ஹிட் 3' படம் வருகிற மே 1-ம் தேதி திரைக்கு வருகிறது. கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார்.