மதுரை குலுங்க குலுங்க.. சித்திரை திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்

9 hours ago 1

ஆந்திராவுக்கு திருப்பதி பிரம்மோற்சவம், கர்நாடகத்துக்கு மைசூரு தசரா, ஒடிசாவுக்கு பூரி ரதயாத்திரை வரிசையில் தமிழகத்துக்கு என்று ஓர் விழா என்றால், அது மதுரை சித்திரை திருவிழா.

மற்ற கோவில்களிலும் பிரமாண்டமான விழாக்கள் நடக்கின்றன. ஆனால், அதற்கும் மேற்கண்ட விழாக்களுக்கும் சில வித்தியாசங்கள் உண்டு. மற்ற விழாக்களுக்கு முத்தாய்ப்பான ஒரு சில நாட்களில் மட்டும்தான் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடும். ஆனால், சித்திரை திருவிழா போன்ற சில விழாக்களுக்கு மட்டும்தான் நகரமே குலுங்கும் வகையில் சுமார் ஒரு வாரம் வரை லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருப்பார்கள்.

மதுரை சித்திரை திருவிழா சைவம் சார்ந்ததா, வைணவம் சார்ந்ததா, குலதெய்வ வழிபாட்டுக்கு உகந்ததா, காவல் தெய்வ வழிபாட்டுடன் தொடர்புடையதா? என்று கேட்டால், இவை எல்லாவற்றுக்கும் ஒரே வார்த்தை பதிலாக ஆம் என்றுதான் கிடைக்கும்.

மீனாட்சி அம்மன் கோவில் சைவ தலம். அழகர்கோவில் வைணவ தலம். கூடவே பல மாவட்ட மக்களின் குலதெய்வமாக அழகர் அருள்பாலித்து வருகிறார். அழகர் மதுரை புறப்பட வேண்டும் என்றால், காவல் தெய்வமான கருப்பணசாமி உத்தரவு கொடுத்தாக வேண்டும் என்பது நம்பிக்கை.

அது போல் மதுரையில் இருந்து மலைக்கு திரும்பும்போதும் தல்லாகுளம் கருப்பணசாமி உத்தரவு கொடுத்தாக வேண்டும். அப்படி என்றால் அழகரோடு, காவல் தெய்வமான கருப்பணசாமி எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறார் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

இது போல் மதங்களை கடந்தும் மக்களை ஒருங்கிணைக்கும் விழாதான் சித்திரை திருவிழா. இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களும் தோளோடு தோளில் கைபோட்டு நட்புடன் பங்கேற்று, அழகரை வரவேற்பார்கள். பக்தர்களுக்கு அன்னதானம் கொடுப்பது, குளிர்பானங்கள் கொடுப்பது என்று தங்கள் வீட்டு விழாவாக கொண்டாடுவது இன்னும் சிறப்புக்குரியதாகும்.

இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவிற்கு மதுரை தயாராகி வருகிறது மதுரை. நாளை மறுநாள் கொடியேற்றப்பட்டு, உற்சவங்கள் உற்சாகமாக நடைபெற உள்ளன. தினமும் காலை, மாலை என இருவேளையும் மீனாட்சி-சுந்தரேசுவரா் வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவார்கள். மே 6-ம் தேதி மீனாட்சி பட்டாபிஷேகம், 8-ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம், 9-ம் தேதி தேரோட்டம், 12-ம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது. இந்த திருக்காட்சிகளைக் காண பக்தர்கள் தயாராகி வருகிறார்கள். 

Read Entire Article