ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி அமமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அளித்த பேட்டி: லாட்டரி சீட்டில் பரிசு விழுவது போல பதவிக்கு வந்தவர் தான் எடப்பாடி பழனிசாமி. 2017 பிப்ரவரி மாதத்தில் திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது, உதவி செய்து ஆட்சியை காப்பாற்றியவர்களுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி. மீண்டும் ஆட்சியை காப்பாற்றியவர்களுக்கும், நான்கரை ஆண்டுகளாக அந்த ஆட்சியை காப்பாற்ற உதவியவர்களுக்கும் துரோகம் என்று, துரோகத்தை தவிர வேறு எதுவுமே தெரியாத எடப்பாடி,
துரோகிகள் குறித்து பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது. வருங்கால தமிழக அரசியல் வரலாற்றில் துரோகம் என்று சொல்லுக்கு உவமையாக இருக்கக்கூடிய பெயர் எடப்பாடி தான். 1972ல் அதிமுக உருவான காலத்தில் இருந்தும் எம்ஜிஆர் காலத்தில் இருந்தும் எம்எல்ஏவாக இருந்தவர்கள் கூட நாங்கள் தான் சீனியர் என்று கூறவில்லை. அப்படியிருக்க நான்தான் சீனியர் என்று எடப்பாடி எதற்காக கூறுகிறார் எனத் தெரியவில்லை. இவ்வாறு கூறினார்.
* ‘சீமான் பேசுவது கூச்சமாயிருக்கிறது’
டிடிவி.தினகரன் மேலும் கூறுகையில், ‘‘சீமான் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். சீமான் தனது மடியில் கனமில்லை என்றால் அதை எதிர்கொள்வது தான் நல்ல வழிமுறை. பெண்களையெல்லாம் வைத்துக்கொண்டு சீமான் பேசுவது நமக்கு கூச்சமாக உள்ளது. ஒரு அரசியல் கட்சித் தலைவராக அவர் பேசுவது எல்லோருக்குமே தலைகுனிவு. காது கொடுத்து கேட்க முடியவில்லை. இதன்மூலம் அவரை அவரே வீழ்த்திக் கொள்கிறார்’’ என்றார்.
The post தமிழகத்தின் வரலாற்றில் துரோகம் என்ற சொல்லுக்கு உவமையே எடப்பாடிதான்: டிடிவி.தினகரன் தாக்கு appeared first on Dinakaran.