
சென்னை,
நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மையமாக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், 42 தொழிலாளர் நல சட்டங்களை திரும்பபெற கோரி வலியுறுத்தியும் இன்று இந்தியா முழுவதும் வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் இந்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்பட மற்ற கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன.
இந்த நிலையில் சென்னையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் போரட்டம் நடைபெற்று வருகிறது சென்னை பேருந்து நிலையம் அருகே அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய தொழிற்சங்கங்களின் ஓட்டுநர், நடத்துநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும் சென்னையில் வழக்கம்போல் பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது . சென்னை கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்தில் தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்த முயன்ற நிலையில் , போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொழிற்சங்கத்தினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .