சென்னை: தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், அச்சுறுத்தும் இலங்கை மீது இந்தியா ஏன் ராணுவ தாக்குதல் நடத்தக் கூடாது என்று செல்வப்பெருந்தகை அதிரடியாக கேள்வி எழுப்பினார். இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது: இலங்கையின் கடற்படை மற்றும் ராணுவமும் சேர்ந்து கொண்டு தமிழ்நாட்டு மீனவர்களை அச்சுறுத்தி தாக்குகிறார்கள், 2014ம் ஆண்டு அப்போதைய ஒன்றிய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தாமரை மாநாடு என்று ராமேஸ்வரத்தில் நடத்தினார். பாஜ ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர் கூட சுடப்படமாட்டார். தமிழ்நாட்டு மீனவர்களை சிறை பிடிக்க நாங்கள் அனுமதி வழங்க மாட்டோம் என்றெல்லாம் பேசினார்கள்.
இவ்வாறு பேசிவிட்டு, கடந்த 11 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் கொடூர தாக்குதல்களை சந்தித்து வருகின்றனர். இதுவரை ஒரு துரும்பை கூட பாஜ அரசு எடுத்து போடவில்லை. தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட போது ராணுவ தாக்குதல் நடத்தப்படும் என ஏன் எச்சரிக்கவில்லை? இலங்கைக்கு எதிராக பேச மறுக்கிறார்கள். சிங்களவர்கள் என்றால் இனிக்கிறது, இஸ்லாமியர்கள் என்றால் கசக்கிறதா? பாகிஸ்தான் மீது ஒரு அளவுகோல், இலங்கை மீது ஒரு அளவுகோல் இருக்க முடியாது. இலங்கையிலும் எல்லை தாண்டி பயங்கரவாதங்கள் நடக்கிறது. எனவே மோடி அரசு இலங்கை அரசிடம் பேச வேண்டும் அல்லது இலங்கை அரசை பேச வைக்க வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
* 10 ஆண்டுகளில் 3,288 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது
2014ம் ஆண்டு முதல் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் எண்ணிக்கை 2014ல் 787, 2015ல் 454, 2016ல் 290, 2017ல் 453, 2018ல் 148, 2019ல் 203, 2020ல் 59, 2021ல் 159, 2022ல் 237, 2023ல் 230, 2024 ஜூலை வரை 268 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 3,288 தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கைது செய்துள்ளது.
The post தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு என்ன? அச்சுறுத்தும் இலங்கை மீது இந்தியா ஏன் ராணுவ தாக்குதல் நடத்தக்கூடாது? செல்வப்பெருந்தகை அதிரடி பேட்டி appeared first on Dinakaran.