சென்னை: இந்திய மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், மீனவர்கள் மீதான தாக்குதல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும், கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகுகளை உடைத்து வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதை தடுக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், இந்திய மீனவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள்: சமீப காலமாக இந்திய மீனவர்கள் மீது அடையாளம் தெரியாத இலங்கையைச் சேர்ந்த நபர்களால் தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த மே 2ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தின் கடலோர கிராமங்களைச் சேர்ந்த 23 மீனவர்கள் மற்றும் அவர்களது 5 நாட்டுப் படகுகள் கடலில் அடையாளம் தெரியாத இலங்கையைச் சேர்ந்தவர்களால் வெவ்வேறு சம்பவங்களில் தாக்கப்பட்டனர்.