1. மாண்புமிகு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக ஏழை கால்நடை விவசாயிகளின் 5000 சினையுற்ற கறவை பசுக்களுக்கு 6.65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 50% மானியத்துடன் “ஊட்டச் சத்து வழங்கும் திட்டம்” செயல்படுத்தப்படும். மாண்புமிகு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட 50 ஊராட்சி ஒன்றியங்களில் 50% மானியத்துடன் 5000 சினைப் பருவ கறவை பசுக்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் சமச்சீர் கலப்புத் தீவனம் வழங்கும் திட்டம் 6.65 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும். இந்த திட்டம் பசுக்கள் மற்றும் கன்றுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி பால் உற்பத்தியை அதிகரிக்க உதவுவதுடன், ஊரக ஏழை கால்நடை விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்தும்.
2. பசுந்தீவன உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் “மேய்க்கால் நில மேம்பாட்டுத் திட்டம்” 1.62 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். மேய்க்கால் நிலங்களின் தீவன உற்பத்தித்திறனை அதிகரிக்க அந்நிலங்களை மேம்படுத்தி அதில் அதிக மகசூல் தரும் பல்லாண்டு தீவனப் புல் வகைகளை பயிரிடுவது அவசியமாக உள்ளது. இதன்காரணமாக விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் தலா ஐந்து ஏக்கர் வீதம் 15 ஏக்கர் மேய்க்கால் நிலங்கள் அடையாளம் காணப்பட்டு, அவைகளை 1.62 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு சுய உதவிக்குழுக்கள் (SHGs) மூலம் தீவன உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
3. மிகவும் பழுதடைந்துள்ள கால்நடை மருத்துவமனைகள் மற்றும் கால்நடை பன்முக மருத்துவமனைகள் 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புதிதாக கட்டப்படும். தமிழ்நாட்டில் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை மருத்துவமனைகளும், கால்நடை பன்முக மருத்துவமனைகளும் அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன், நபார்டு வங்கி உதவியுடன் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதனால் கால்நடைகளுக்கு சிரமங்கள் இல்லாமல் தகுந்த உயர் சிகிச்சை அளிக்கவும் கால்நடை வளர்ப்போர் பொருளாதார அளவில் பயன்பெறவும் வாய்ப்பு ஏற்படும்.
4. ஒருங்கிணைந்த சுகாதார திட்டத்தின் கீழ் 200 கால்நடை மருத்துவர்களுக்கு 20 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். கால்நடை நலன், நோய் கட்டுப்பாடு, ஒருங்கிணைந்த கண்காணிப்பு மூலம் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய நோய்களை கட்டுப்படுத்துதல் குறித்த திறன்களை மேம்படுத்திட, புதிய தொழில்நுட்பங்கள், 200 கால்நடை மருத்துவர்களுக்கு ஒருங்கிணைந்த சுகாதாரத் திட்டத்தின் கீழ் 20 இலட்சம் ரூபாய் செலவில் பயிற்சி வழங்கப்படும். இதன்மூலம் கால்நடை மருத்துவர்கள் நவீன சிகிச்சை முறைகள் மற்றும் தொழில் நுட்பங்களை அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும்.
5. தீவன உற்பத்தி தொழில்நுட்பங்கள், மேம்பட்ட தீவன உற்பத்தி, சேமிப்பு மற்றும் பயன்பாட்டு தொழில்நுட்பங்கள் குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 30 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். தீவன உற்பத்தியில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து, கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடைப் பண்ணை மேலாளர்களின் அறிவைப் போதுமான அளவு வலுப்படுத்துவது இன்றியமையாததாகும். எனவே தீவன உற்பத்தியை அதிகரிக்கவும், தீவனப் பற்றாக்குறையை சமாளிக்கவும் களத்தில் பணிபுரியும் கால்நடை மருத்துவர்களுக்கான தீவன உற்பத்தி, சேமிப்பு மற்றும் பயன்பாடு குறித்த பயிற்சி, கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 240 கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்களுக்கு 30 இலட்சம் ரூபாய் செலவில் அளிக்கப்படும்.
6. தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் அடையாறு செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம் நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய தனித்துவம் வாய்ந்த சிகிச்சை மையமாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தரம் உயர்த்தப்படும். அடையாறு செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன மயமாக்கப்பட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தனித்துவம் வாய்ந்த சிகிச்சை மையமாக மேம்படுத்தப்படும். இம்மருத்துவமனையில் நுண்கதிர் கருவி, அல்ட்ரா சவுண்டு உட்பட அதிநவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய சிகிச்சை அளிக்கும் வசதியுடன் உள்நோயாளி பிரிவும் ஏற்படுத்தப்படும்.
7. தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள அயலின கால்நடை பெருக்குப் பண்ணை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணைகளில் செயல்பட்டு வரும் உறைவிந்து உற்பத்தி நிலையங்கள் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வலுப்படுத்தப்படும். தரமான உறை விந்து உற்பத்திக்கான கட்டிடங்கள் மற்றும் உபகரணங்கள் தேவையை சமண் செய்யும் விதமாக தஞ்சாவூர், ஈச்சங்கோட்டை அயலின கால்நடை பெருக்குப் பண்ணை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கால்நடை பண்ணை, ஓசூரிலுள்ள உறைவிந்து உற்பத்தி நிலையங்கள் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும்.
8. கால்நடை நிலையங்கள் மற்றும் கிளை நிலையங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல் பணிக்கு தேவையான பொருட்கள் 3.65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். தரமான செயற்கைமுறை கருவூட்டல் சேவை வழங்க செயற்கை முறை கருவூட்டல் மையங்களுக்கு (கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை கிளை நிலையங்கள்) தேவையான 3 லிட்டர் மற்றும் 33 லிட்டர் கொள்ளளவு கொண்ட உறைவிந்து கொள்கலன்கள், செயற்கை முறை கருவூட்டல் பணிக்கு தேவையான உபகரணங்கள் 3.65 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.
9. செயற்கை முறை கருவூட்டல் பணிகள் தங்கு தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்யும் விதமாக கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி அலகுகளில் உறைவிந்து சேமிப்பு மற்றும் விநியோகத்திற்குத் தளவாடப் பொருட்கள் கொள்முதல் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் 13. 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும். செயற்கைமுறை கருவூட்டல் சேவை இடுபொருட்கள் விநியோகத்தின் தரத்தை பராமரித்தல் மற்றும் மேம்படுத்த 31 கால்நடை இனப்பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி (CBFD) அலகுகளுக்கு 13.19 கோடி ரூபாய் செலவில் தேவையான கட்டுமானப் பணிகள் மற்றும் உபகரணங்கள் (48 லிட்டர் உறை விந்து கொள்கலன்கள், 55 லிட்டர் திறன் கொண்ட திரவ நைட்ரஜன் கொள்கலன்கள், 320 லிட்டர் திறன் கொண்ட உறை விந்து கொள்கலன்கள்) வழங்கப்படும்.
10. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், மாவட்ட கால்நடைப்பண்ணையில் செயல்படும் ஆய்வு கூட கருத்தரித்தல் அலகு 4.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேம்படுத்தப்படும். ஓசூர் மாவட்ட கால்நடைப் பண்ணையில் செயல்படும் ஆய்வுக்கூட கருத்தரித்தல் அலகு 4.50 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்டு, உயர் உற்பத்தித்திறன் கொண்ட பசுக்களை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய வழி வகை செய்யப்படும்.
இதன்மூலம் அதிக மரபு திறன் கொண்ட காளைகள், உயர் ரக பசுக்கள், அதிக உற்பத்தித்திறன் கொண்ட கலப்பின / உள்நாட்டின பசுக்கள் உற்பத்தி செய்யப்படும்.
11. ஏழை எளிய மக்களின் உடனடி நிதித்தேவையை பூர்த்தி செய்யும் ஆட்டினங்களின் உற்பத்தி மற்றும் இனப்பெருக்கத்தை மேலும் மேம்படுத்திட “தமிழ்நாடு மாநில வெள்ளாடு/செம்மறி ஆடு உற்பத்தி மற்றும் இனப்பெருக்கக் கொள்கை” உருவாக்கப்படும். ஏழை எளிய மக்களின் உடனடி நிதித்தேவையை பூர்த்தி செய்யும் ஆட்டின உற்பத்தியை மேலும் மேம்படுத்திட “தமிழ்நாடு மாநில வெள்ளாடு / செம்மறி ஆடு உற்பத்தி மற்றும் இனப்பெருக்கக் கொள்கை” உருவாக்கப்படுவதால், வகைப்படுத்தப்படாத செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடுகளின் உற்பத்தித்திறன் உயர்த்தப்படுவதால் விவசாயிகளின் பொருளாதார நிலை மேம்படும்.
12. பாதுகாப்பான செல்லப்பிராணி வளர்ப்பு மனிதாபிமானத்துடன் பிராணிகளை நடத்துதல் ஆகியன குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஏதுவாக சென்னை மற்றும் கோயம்புத்தூரில் தனியார் பங்களிப்புடன் “செல்லப்பிராணி பூங்கா” 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். சென்னை மற்றும் கோயம்புத்தூர் பெருநகரங்களில் 5 கோடி ரூபாய் செலவில் செல்லப்பிராணிகள் வளர்ப்போருக்கு விழிப்புணர்வு, செல்லப் பிராணிகளுக்கு புத்துணர்வு பூங்கா மற்றும் மருத்துவ வசதிகள் ஒரே இடத்தில் அமைக்கப்படும். இதன் மூலம் செல்லப்பிராணிகள் வளர்ப்போருக்கும், பொதுமக்கள் மற்றும் சிறார்களுக்கும் செல்லப்பிராணிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
13. துறையில் இயங்கும் கால்நடைப் பண்ணைகளில் பசுந்தீவன உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு, நவீன தீவன வங்கித் திட்டம் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். கால்நடைத் பராமரிப்புத்துறை பண்ணைகளில் பயிரிடப்படாமல் தரிசாக உள்ள நிலங்களைப் பசுந்தீவன சாகுபடியின் கீழ் கொண்டு வருவதன் மூலம் அவை தீவன உற்பத்தி மையங்களாக மாற்றப்படும். அதில் 2 கோடி ரூபாய் செலவில் அதிக மகசூல் தரும் ஓராண்டு மற்றும் பல்லாண்டு தானிய பசுந்தீவனப் பயிர்கள், பயறு வகைப் பசுந்தீவனப் பயிர்கள் மற்றும் புல் வகைத் தீவனப்பயிர்கள் மானாவாரி மற்றும் இறவை சாகுபடியின் கீழ் கொண்டு வரப்படும். இதன் மூலம் பண்ணை நிலங்கள் நவீன தீவன வங்கிகளாக செயல்படும்.
14. ஆதரவற்ற, கைவிடப்பட்ட, மீட்கப்பட்ட மற்றும் விபத்துகளில் காயமுற்ற கால்நடைகளை பேணிப்பாதுகாக்கும் விதமாக பராமரிப்பு நிலையங்கள், வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டம் மூலம் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தோற்றுவிக்கப்படும். விபத்துக்களில் காயமுற்ற, கைவிடப்பட்ட, ஆதரவற்ற மற்றும் மீட்கப்பட்ட விலங்குகளை பாதுகாக்க ஏதுவாக பராமரிப்பு காப்பகங்கள், வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டம் மூலம் 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இதன் மூலம் விபத்துக்களால் பாதிப்படையும் கால்நடைகள் பேணி பாதுகாக்கப்படும். மேலும் இந்த விலங்குகளால் மற்ற கால்நடைகள் மற்றும் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைக்கப்படும்.
15. தெருவில் சுற்றித்திரியும் கால்நடைகள் மற்றும் ஆதரவற்ற தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் பணி தனியார் பங்களிப்புடன், பிராணிகள் நல வாரியம் மூலம் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் விரிவுபடுத்தப்படும். மாநிலம் முழுவதும் கருத்தடை மையங்கள் அமைக்கப்பட்டு, தெருக்களில் சுற்றித்திரியும் ஆதரவற்ற தெருநாய்களுக்கு, கருத்தடை மற்றும் வெறிநோய் தடுப்பூசிப்பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், இதற்குத் தேவைப்படும கால்நடை மருத்துவர்கள் நியமனம் மற்றும் அறுவை சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் ஆகியவை 20 கோடி ரூபாய் செலவில் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும். மேலும் இந்த விலங்குகளால் மற்ற கால்நடைகள் மற்றும் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைக்கப்படும்.
16. உறைவிந்து உற்பத்தி நிலையங்களுக்கு உயர் மரபுத்திறன் கொண்ட காளைகள், ஆய்வுக்கூட கருத்தரித்தல் திட்டத்திற்கு உயர் மரபுத்தன்மையுடைய பசுக்கள் மற்றும் இதர பண்ணைகளுக்கு கால்நடைகள் கொள்முதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துதல் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும். துறையின் மூன்று உறைவிந்து உற்பத்தி நிலையங்களுக்கு உயர் மரபுத்திறன் கொண்ட காளைகள், ஓசூர் மாவட்ட கால்நடை பண்ணையின் ஆய்வுக்கூட கருத்தரித்தல் திட்டத்திற்கு தேவைப்படும் பசுக்கள் மற்றும் இதர பண்ணைகளுக்கு கால்நடைகள் கொள்முதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் 10 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு உயர் தர விந்து உற்பத்தி செய்யப்படுவதன் மூலம் பால் உற்பத்தி அதிகரிக்க வழி வகுக்கும். மேலும் புதிய கால்நடைகள் கொள்முதல் செய்வதன்மூலம் பண்ணைகளின் கால்நடை உற்பத்தித் திறன் அதிகரிக்கும்.
17. கால்நடைகளுக்கு இடையிலான மோதல் மற்றும் கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதல் கையாளும் வழிமுறைகளுடன் “ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட கால்நடைகளுக்கான கொள்கை” உருவாக்கப்படும். தெருக்களில் அனாதையாக விடப்பட்ட கால்நடை மற்றும் தெருநாய்களுக்கு இடையிலான மோதல் மற்றும் கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதல் ஆகியவற்றை கையாள ஏதுவாக “ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட கால்நடைகளுக்கான கொள்கை” உருவாக்கப்படும். மேலும் இந்த விலங்குகளால் மற்ற கால்நடைகள் மற்றும் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைக்கப்படும்.
18. கால்நடை வளர்ப்புத் தொழிலில் தொழில் முனைவோரை உருவாக்கவும் கால்நடை வளர்ப்பினை வணிக மயமாக்க உதவும் வகையிலும், “கால்நடை வளர்ப்பு தொழில் முனைவோருக்கான ஆலோசனை மையம்” 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஏற்படுத்தப்படும். கால்நடை வளர்ப்பை வணிக மயமாக்கவும், கால்நடை வளர்ப்பு மற்றும் அதை சார்ந்த தொழில்முனைவோரை உருவாக்கி ஆலோசனை வழங்க 50 இலட்சம் ரூபாய் செலவில் வசதிகள் ஏற்படுத்தப்படும். கால்நடை வளர்ப்பு தொழிலை வணிகரீதியில் மேற்கொள்ளும் இளைஞர்கள், பண்ணையாளர்கள் ஆகியோருக்கு உயர் உற்பத்தி திறன் கொண்ட கால்நடைகளை இலாபகரமாக சந்தைப்படுத்துதல் மற்றும் தொழில் நுட்ப குறிப்புகள் ஆகியவை தொழில் முனைவோருக்கு வழங்கப்படும்.
19. மாவட்டந்தோறும் “ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைத்திட்டம்” தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை மூலம் செயல்படுத்தப்படும். இதன்மூலம் தரமான கால்நடைகள் மற்றும் தீவனங்கள் நியாயமான விலையில் விவசாயிகளுக்கு வழங்குவது உறுதி செய்யப்படும். அனைத்து மாவட்டங்களிலும் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு தரமான கால்நடைகள் மற்றும் தீவனங்கள் நியாயமான விலையில் கிடைத்திட வழி செய்ய தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை மூலம் ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைத்திட்டம் செயல்படுத்தப்படும். தேவையின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் கால்நடை வளர்ப்பு அனைத்து பகுதிகளிலும் பரவலாக்கப்படும். இதன்மூலம் பொருளாதாரம் மேம்பட இத்திட்டம் வழிவகுக்கும்.
20. 100 கால்நடை விவசாயிகள் கால்நடை வளர்ப்பு குறித்த பல்வேறு நடைமுறைகளை தெரிந்து கொள்ளும் வகையில் கால்நடை பொருட்கள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் பிற மாநிலங்கள் / வெளிநாடுகளுக்கு விழிப்புணர்வு பயணம் (Exposure visit) மேற்கொள்ள 1 கோடி ரூபாய் நிதிஒதுக்கீட்டில் ஏற்பாடு செய்யப்படும். கால்நடை பராமரிப்புத்துறையின் அனைத்து மண்டல அலுவலர்கள் மூலமாக அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் ஆர்வமுள்ள கால்நடை வளர்போர்களை கண்டறிந்து அவர்களை பிற மாநிலங்களில் கடைபிடிக்கப்படும் கால்நடை வளர்ப்பு நடைமுறைகளை அறிந்துகொள்ளும் வண்ணம் 1 கோடி ரூபாய் செலவில் கால்நடை வளர்ப்போர்களை பிற மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று விழிப்புணர்வு பயணம் (Exposure visit) மேற்கொள்ளப்படும்.
21. கால்நடைகளை சிறந்த முறையில் பராமரிக்கும் விவசாயிகளை கண்டறிந்து, அடையாளப்படுத்தி அவர்கள் பராமரிக்கும் கால்நடைகளுக்கு சிறந்த கால்நடைக்கான சான்று வழங்கப்படும். இதன் மூலம் நல்ல தரமான கால்நடைகள் இனப்பெருக்கம் செய்யப்படுவது உறுதி செய்யப்படும். சிறந்த கால்நடை பராமரிப்பு முறைகளை பின்பற்றி உயர்தர கால்நடைகளை வளர்த்து வரும் கால்நடை விவசாயிகளைக் கண்டறிந்து, அவர்களின் பணியை அங்கீகரிக்கும் விதமாக சிறந்த கால்நடைக்கான சான்று வழங்கப்படும். இதன் மூலம், கால்நடைகளின் உடல்நலம், இனப்பெருக்கம் மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் முறைகளை ஊக்குவிக்க இயலும். மேலும், விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் நவீன அறிவியல் முறைகளை பயன்படுத்த ஊக்கு விக்கப்படுவார்கள்.
22. கால்நடை வளர்ப்புத் தொழிலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் நவீன தொழில் நுட்பங்களை கால்நடை வளர்ப்போர் அறிந்துகொள்ள ஏதுவாக கால்நடை விவசாயிகளுக்கு “கால்நடை பராமரிப்பு தொழில் நுட்ப பயிற்சி திட்டம்” 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். கால்நடை பராமரிப்புத்துறையின் மூலமாக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழக வல்லுநர்கள் உதவியுடன் இணைந்து துறையின் அலுவலர்கள் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு நவீன தொழில் நுட்பங்களை எளிதில் பயன்படுத்தும் வகையிலான தொழில்நுட்ப பயிற்சி 2 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். இந்த பயிற்சித் திட்டத்தில் கருமாற்று தொழில்நுட்பம் மற்றும் பாலினம் பிரிக்கப்பட்ட உறைவிந்து பயன்பாடு போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கப்படும்.
23. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், மாவட்ட கால்நடைப்பண்ணை ஒருங்கிணைந்த கால்நடை உற்பத்தி மையமாக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தரம் உயர்த்தப்படும். ஓசூர், மாவட்ட கால்நடைப்பண்ணை ஒருங்கிணைந்த கால்நடை உற்பத்தி மையமாக 10 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்படும். இதன் மூலம் அதிக உற்பத்தித்திறன் கொண்ட பசுக்களை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்வதுடன், கால்நடை வளர்ப்பில் சிறந்த நடைமுறைகள் மற்றும் செயல்பாட்டு முறைகள் விவசாயிகளுக்கு கிடைக்க வழி வகை செய்யப்படும். கூடுதல் எண்ணிக்கையில் தரமான கால்நடைகள் உற்பத்தி செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு தரமான கால்நடைகள் அரசு நிர்ணயிக்கும் விலையில் கிடைக்கும்.
24. தமிழ்நாட்டில் உள்ள ஏழ்மை நிலையிலுள்ள குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், அவர்களை தொழில் முனைவோர்களாக ஆக்குவதற்கும் செம்மறி ஆடு/வெள்ளாடு வழங்கும் திட்டம் 50 சதவீத மானியத்தில் செயல்படுத்தப்படும் ஏழ்மை நிலையிலுள்ள குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், அவர்களை தொழில் முனைவோர்களாக ஆக்குவதற்கும் செம்மறி ஆடு/வெள்ளாடு இனவிருத்திப் பண்ணைகள் அமைக்கும் திட்டம் 50 சதவீத மானியத்தில் செயல்படுத்தப்படும். செம்மறி ஆடு/வெள்ளாடு வளர்ப்போர் சங்கங்கள் உருவாக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும்.
25. தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற ஏழை, நிலமற்ற விவசாய தினக்கூலி பயனாளிகளுக்கு நாட்டின கோழிக் குஞ்சுகள் வழங்கும் திட்டம் 50 சதவீத மானியத்தில் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் நாட்டுக் கோழிகள் குறிப்பிடத்தக்க கலாச்சார, பொருளாதார மற்றும் ஊட்டச்சத்து முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. கிராமப்புற மக்களுக்கு போதிய வருமானம் கிடைக்க வழிவகை செய்ய 50% மானியத்தில் நாட்டின கோழிக்குஞ்சுகள் வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் அத்துடன் அவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளும் வழங்கப்படும்.
26. திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாணவியர்களுக்கான கூடுதல் விடுதி கட்டடம் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்படும். திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவியர்களுக்கு பாதுகாப்பான கற்கும் சூழலை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாணவியர் தங்கி பயில்வதற்கென கூடுதல் விடுதி கட்டடம் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்படும்.
27. ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாணவியர்களுக்கான கூடுதல் விடுதி கட்டடம் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்படும். ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவியர்களுக்கு பாதுகாப்பான கற்கும் சூழலை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாணவியர் தங்கி பயில்வதற்கென கூடுதல் விடுதி கட்டடம் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்படும்.
28. விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு திட்டத்திற்கான உயர்நிலை பயிற்சி மையம் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிறுவப்படும். நாய்களில் இனப்பெருக்க கட்டுப்பாட்டிற்காகவும், மனித-விலங்கு மோதல் தொடர்பான அபாயங்களைத் தடுப்பதற்காகவும், கால்நடை பட்டதாரிகள் மற்றும் கள கால்நடை மருத்துவர்களுக்கு விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு முறைகளின் பல்வேறு நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கும் இலக்குடன் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு திட்டத்திற்கான உயர்நிலை பயிற்சி மையம், 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிறுவப்படும். இதில் உள்நோயாளி பிரிவு மற்றும் நாய் கொட்டகைகள் சுய நிதி அடிப்படையில் ஏற்படுத்தப்படும்.
29. நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மருத்துவமனையில் கூடுதல் கட்டடங்கள் கட்டுதல் மற்றும் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஏற்படுத்தப்படும். நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மருத்துவமனையில் இருபத்து நான்கு மணிநேரமும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதனை உறுதி செய்யும் பொருட்டு நவீன வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவினை நிறுவும் இலக்குடன் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மருத்துவமனையில் 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கூடுதல் கட்டடங்கள் மற்றும் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
30. கால்நடை விவசாயிகளுக்கு கள அளவில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தேவையான தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகள் வழங்க துறை அலுவலர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய “கால்நடை தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் மேலாண்மை குழு” அமைக்கப்படும். கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள்/ கால்நடை துறை தொழில்நுட்ப வல்லுநர்கள், கால்நடை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய “கால்நடை தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் மேலாண்மை குழு” தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழம் மூலம் அமைக்கப்படும். இதன்மூலம், களப்பணி அலுவலர்கள், ஆராய்ச்சியாளர்கள், விவசாயிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டு தேவையான தொழில்நுட்பங்கள் விவசாயிகளை சென்றடையும்.
31. கால்நடை துறையில் புதிய ஆராய்ச்சி முன்னெடுப்புகளை வெளிக்கொணரும் வகையிலும் அவற்றை வணிக ரீதியில் மேம்படுத்தும் வகையிலும், மாணவர்கள், தொழில்முனைவோர் மற்றும் தொழில் துறையினர் மாநாடு (Students, Entrepreneurs and Industrialist) 50 இலட்சம் ரூபாய் செலவில் நடத்தப்படும். கால்நடை துறையின் மூலமாக புதிய முன்னெடுப்புகளை வெளிக்கொணரும் வகையில், அதனை வணிக ரீதியில் மேம்படுத்தி தொழில்முறையில் முன்னேற்றம் அடைய 50 இலட்சம் ரூபாய் செலவில் மாநாடு (Students, Entrepreneurs and Industrialist) நடத்தப்படும். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழம் மூலம் செயல்படுத்தப்படும் இந்த முயற்சியின் மூலம் கள அளவில் ஏற்படும் சவால்கள் மற்றும் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்து வணிகரீதியாக பயன்படுத்தவும் இம்மாநாடு பயன்படும்.
The post தமிழக சட்டப்பேரவையில் ”முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ்” 5000 சினையுற்ற கறவை பசுக்களுக்கு நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.