
தஞ்சாவூர்,
ஆந்திரா மாநில துணை முதல் மந்திரியும், ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் கடந்த சில நாட்களாக, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள பிரபலமான கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று காலை தஞ்சாவூரில் இருந்து காரில் புறப்பட்டு, முருகனின் நான்காம் படைவீடான சுவாமிமலை, சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு தனது மகன் ஆதிரா நந்தன் மற்றும் நண்பர் ஆனந்த்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், பொது சிவில் சட்டம் மற்றும் விஜய்யின் அரசியல் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து பவன் கல்யாண் கூறியதாவது;
"பல வருடங்களாக கும்பகோணம் கோயிலுக்கு வர வேண்டும் என திட்டமிட்டிருந்தேன். அதன்படி ஆன்மிக சுற்றுலாவாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளேன். இங்கு அரசியல் குறித்து பேசக் கூடாது. பேசவும் விரும்பவில்லை. அது தான் எல்லோருக்கும் நல்லது. எல்லோருக்கும் நல்லதே நடக்கும்."
இவ்வாறு அவர் கூறினார்.