
சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், 2025 பிப்ரவரி 20ம் தேதி முதல், 2026 பிப்ரவரி 19ம் தேதி வரையிலான 365 நாட்களும், நாள் ஒன்றுக்கு 1000 நபர்களுக்கு, காலை உணவு வழங்கும் "அன்னம் தரும் அமுதக்கரங்கள்" மாபெரும் திட்டத்தின் 4ம் நாளான நேற்று துறைமுகம் கிழக்கு பகுதி, மண்டலம்-5, வார்டு-60, மண்ணடி, செம்பு தாஸ் தெரு சந்திப்பு, மூக்கர் நல்லமுத்து தெரு மற்றும் அன்னை சத்யா நகர் பகுதியில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பொதுமக்கள் மற்றும் சிறுவர்களுக்கு காலை உணவு வழங்கினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மயிலாப்பூரில் தொடங்கப்பட்ட மகா சிவராத்திரி விழா படிப்படியாக தற்போது இந்தாண்டு 9 கோவில்களில் கொண்டாடப்பட உள்ளது.
அதன்படி, வரும் 26-ந்தேதி திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர், கோவை பட்டீஸ்வரசாமி, மயிலை கபாலீசுவரர், தஞ்சை பிரகதீஸ்வரர், நெல்லை, நெல்லையப்பர், திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர். திருவாரூர் தியாகராஜசாமி, திருவாலங்காடு வடாரண்யேஸ்வரசாமி ஆகிய கோவில்களில் மகா சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் மகாசிவராத்திரி விழாவினை கண்காணித்திட ஏதுவாக துறை அலுவலர்களை கொண்ட மதிப்பீட்டுக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன.
இக்குழுக்கள் கோவில்களில் மகா சிவராத்திரி விழாவிற்காக செய்யப்பட்டுள்ள பணிகளை ஆய்வு செய்து வழங்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் கோவில்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்படுகிறது. மகா சிவராத்திரி நாளில் பக்தர்களுக்கு இடைவிடாது பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பக்தர்களுக்கு தேவையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அடிப்படைய வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் செய்து தரப்பட்டுவருகிறது" என்று அவர் கூறினார்.