தன்னம்பிக்கையை அதிகரிக்கும் ஆக்வா யோகா!

11 hours ago 4

நன்றி குங்குமம் தோழி

யோகாசனம், பலவித உடற்பயிற்சிகள் பரிபூரண மனச்சாந்தியை அடைய உதவும் ஒரு பழமையான நடைமுறை. உடலுக்கு பலத்தை, நலம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த
உதவும். யோகாசனங்களில் பல வகை உள்ளன. பொதுவாக யோகாசனங்களை தரையில் செய்வது வழக்கம். ஆனால் அதனை தண்ணீர் மட்டுமில்லாமல் கயிறு அல்லது தொட்டில் போன்ற அமைப்பிலும் செய்ய முடியும் என்கிறார் சென்னையை சேர்ந்த யோகாசன பயிற்சியாளர் கற்பகவள்ளி. இவர் ஒருவரின் நேரம், உடல் நிலைக்கு ஏற்ப யோகாசனங்களை சொல்லித் தந்து வருகிறார்.

‘‘நான் ஐ.டி துறையில் வேலை பார்த்து வந்தேன். என் கணவர் யோகாசன பயிற்சியாளர். ஐ.டி வேலையில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்க்க வேண்டும் என்பதால் முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தேன். அதற்கு யோகா நல்ல தீர்வு கொடுக்கும் என்று என் கணவர் சொல்லித்தான் நான் பயிற்சி எடுத்தேன். அதன் பிறகு என் கணவர் என்னை யோகாசனத்தில் தனிப்பட்ட பயிற்சி எடுக்கச் சொன்னார். அவரின் ஆலோசனைப்படி யோகாசனத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் நேச்சுரோபதியில் முடிச்சேன். அதன் பிறகு 2011ல் இருந்து நான் பயிற்சி அளிக்க துவங்கினேன். அதே வருடம் நானும் என் கணவரும் சேர்ந்து ‘குளோபல் ஸ்கூல் ஆஃப் யோகா’ என்ற பெயரில் சென்னை அண்ணாநகர் மற்றும் கொரட்டூரில் யோகாசனப் பயிற்சி மையத்தினை துவங்கினோம். நானும் என் கணவரும் முழு நேரம் இதில் கவனம் செலுத்தி வருகிறோம்’’ என்றவர் மக்கள் யோகாவில் வித்தியாசமான பயிற்சிகளை விரும்புவதாக தெரிவித்தார்.

‘‘பொதுவாக யோகாசனங்கள் தரையில் படுத்தும், உட்கார்ந்தும் செய்வது வழக்கம். ஆனால் என்னிடம் பயிற்சிக்கு வருபவர்கள் இதில் வேறு புதுமையினை புகுத்த முடியுமான்னு கேட்ட ேபாது அதில் வேறு என்ன இருக்கிறது என்று ஆய்வு செய்ய தொடங்கினேன். அது சார்ந்த வர்க்‌ஷாப்பில் பங்கு பெற்று பயிற்சி எடுத்தேன். சிலவற்றை ஆன்லைன் மூலமாகவும் கற்றுக் கொண்டேன்.

அப்படித்தான் ஆக்வா யோகா பற்றி தெரிய வந்தது. நீச்சல் குளத்தில் செய்யக்கூடிய இந்த யோகாசனப் பயிற்சியில் என்ன வித்தியாசம் உள்ளது என்று தெரிந்து கொள்ள அதற்கான பயிற்சியில் ஈடுபட்டேன். சில அடுக்குமாடி குடியிருப்புகளில் நீச்சல் குளம் இருக்கும். அங்கு அனுமதி பெற்று பயிற்சி அளித்தோம். ஓட்டலில் உள்ள நீச்சல் குளத்திலும் பயிற்சி கொடுத்தோம். இரண்டு மணி நேர பயிற்சியினை நான்கு வருடமாக குறிப்பாக வெயில் காலத்தில் மட்டுமே அளித்து வருகிறோம்.

ஆக்வா யோகா மட்டுமில்லாமல் மேலும் பலவிதமான யோகாசனங்கள் உள்ளன. ஹத யோகா, ஏற்கனவே யோகா பயிற்சி மேற்கொண்டவர்கள் மேலும் மேம்பட இதனை செய்யலாம். கர்ப்பிணி பெண்களுக்கு பிரீநேட்டல் யோகா. ஐந்து மாதம் முதல் பிரசவ காலம் வரை மேற்கொள்ளலாம். தூக்கமின்மையால் தவிப்பவர்கள் மற்றும் PCOD பிரச்னை உள்ளவர்களுக்கு யோகா உகந்தது. மேலும் ஏரியல் யோகா, ரோப் யோகா என பல வகை உள்ளன. ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப ஆசனங்களை தேர்வு செய்து மேற்கொள்ளலாம்’’ என்றவர், ஆக்வா யோகாவின் சிறப்பம்சத்தினை விவரித்தார்.

‘‘உடல் பருமனாக உள்ளவர்கள் தரையில் யோகாசனம் செய்யும் போது பல அசௌகரியத்தை உணர்வார்கள். ஆனால் அவர்கள் அதே ஆசனங்களை தண்ணீரில் செய்யும் போது லேசாக ஃபீல் செய்வாங்க. காரணம், தண்ணீருக்குள் புவியீர்ப்பு விசை இருக்காது. அதனால் ஒருவர் தங்களின் உடல் எடையினை லேசாக உணர்வதால், ஆசனங்களை தண்ணீருக்குள் எளிதாக செய்ய முடியும்.
உடலும் எளிதாக வளைந்து கொடுக்கும். ரொம்ப ரிலாக்ஸாக செய்ய முடியும். தண்ணீரில் இருந்து வெளியே வந்த பிறகுதான் அவர்களின் உடலில் யோகாசனம் செய்வதற்கான மாற்றத்தினை உணர்வார்கள்.

ஆக்வா யோகாவினை நீச்சல் குளத்தில்தான் செய்ய முடியும். அதுவும் தண்ணீர் தோள்பட்டை அளவுதான் இருக்க வேண்டும். அதற்கேற்ற நீச்சல் குளத்தினைதான் நாங்க தேர்வு செய்வோம். தண்ணீருக்குள் ஒருவரும், தண்ணீருக்குள் வெளியே ஒருவர் என இரு பயிற்சியாளர்கள் இருப்போம். வெளியே இருப்பவர் செய்யும் பயிற்சிகளை பார்த்து செய்ய வேண்டும். தண்ணீருக்குள் இருக்கும் பயிற்சியாளர் ஆசனங்கள் செய்ய மாட்டார். சிலர் தண்ணீருக்குள் செய்யும் போது நிலை தடுமாறி விழ வாய்ப்புள்ளது.

அவர்களை பாதுகாப்பதுதான் இவரின் வேலை. மேலும் ஆக்வா யோகா செய்ய நீச்சல் பயிற்சி தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. முதலில் பயிற்சி எடுக்க வருபவர்களுக்கு தண்ணீரை பழக்கப்படுத்துவோம். அவர்களை நீச்சல் குளத்தில் மெதுவாக நடக்க பழக்குவோம். அடுத்து கண்களை மூடிக்கொண்டு நடக்க வேண்டும். அதன் பிறகுதான் பயிற்சியே துவங்கும். இந்த யோகாசனம் பெரியவர்கள் மட்டுமில்லை குழந்தைகளும் செய்யலாம்.

குறிப்பாக உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்களுக்கு இந்த யோகா நல்ல பலன் கொடுக்கும். மேலும் தரையில் செய்வதை விட தண்ணீருக்குள் செய்யும் போது அவர்களின் உடல் நிலையில் மாற்றம் ஐந்து மடங்கு அதிகரிக்கும். கவனச்சிதறல்கள் குறையும். காரணம், முழு கவனம் செலுத்தாமல் தண்ணீருக்குள் யோகாசனம் செய்ய முடியாது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடல் எடை குறையும். உடல் லேசாக இருப்பதாக உணர்வார்கள். ஸ்ட்ரெஸ் நீங்கும்.

ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சரும பிரச்னை உள்ளவர்கள் இதனை செய்ய அனுமதி கிடையாது. மேலும் மாதவிடாய் நேரத்திலும் இதனை மேற்கொள்ளக் கூடாது. இந்தப் பயிற்சியினை மாதம் ஒருமுறை என இரண்டு மணி நேரம் செய்யலாம். பெரும்பாலும் இளம் வயதினர்தான் இதனை அதிகமாக விரும்புகின்றனர். நாங்க ஆக்வா யோகாவினை பெரும்பாலும் வெயில் காலத்தில் தான் செய்கிறோம். மற்ற நாட்களில் அவர்கள் சாதாரண யோகா, ஏரியல் மற்றும் ரோப் யோகா போன்ற பயிற்சியினை மேற்கொள்ளலாம்’’ என்றவர், யோகாசனத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து பகிர்ந்தார்.

‘‘யோகாசனம் செய்பவர்களுக்கு அவர்களின் உடல் மற்றும் மூளையுடன் நல்ல தொடர்பு இருக்கும். இன்றைய காலக்கட்டத்தில் பலர் மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல் பிரச்னையால் அவதிப்படுகிறார்கள். சோஷியல் மீடியாவின் ஆதிக்கத்தினால் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிறார்கள். இவை அனைத்தும் நம் உடல் நலனை கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்க துவங்கும். தினமும் ஒரு மணி நேரம் யோகாசனம் மேற்கொண்டால் இவை அனைத்தும் நீங்கி உடல் ஆரோக்கியமாக இருப்பதை உணர முடியும். உடல் சோர்வு நீங்கும். நல்ல தூக்கம் வரும், சுவாசப் பிரச்னை குணமாகும். மனம் அமைதியாகும். மேலும் உள் உறுப்புகள் சுத்தமாகும். நோய் பாதிப்பு வராமல் பாதுகாக்கும். அப்படியே வந்தால் அதை கட்டுப்பாட்டில் வைக்கும். சில நோய்கள் குணமாகவும் வாய்ப்புள்ளது.

எங்களின் மையத்தில் நேரடியாக பயிற்சி பெறலாம். வர முடியாதவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் பயிற்சி அளிக்கிறோம். சிலர் பயிற்சி மேற்கொண்டு அவர்களே அதனை வீட்டில் தொடர்வார்கள். சிலர் தனிப்பட்ட பயிற்சியினை விரும்புவார்கள். அவர்கள் வீட்டிற்கு சென்றும் பயிற்சியளிக்கிறோம். இது போல் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நாங்க பயிற்சி அளித்து வருகிறோம். பொதுவாக விடியற்காலை செய்வது சிறந்தது. முடியாதவர்கள் மாலை மற்றும் இரவு நேரத்தில் படுக்கும் முன் செய்யலாம். யோகாசனம் தினசரி செய்து வந்தால் என்றும் மார்கண்டேயனாக இருக்கலாம்’’ என்றார் கற்பகவள்ளி.

தொகுப்பு: ஷம்ரிதி

The post தன்னம்பிக்கையை அதிகரிக்கும் ஆக்வா யோகா! appeared first on Dinakaran.

Read Entire Article