தன்னம்பிக்கையும், வீரமும் ஊட்டி பெண் குழந்தைகளை பாதுகாப்பது நம் கடமை

2 hours ago 2

*மயிலாடுதுறை கலெக்டர் அறிவுரை

மயிலாடுதுறை : பெண் குழந்தைகள் நம் கண்கள். தன்னம்பிக்கையும், வீரமும் ஊட்டி பாதுகாப்பது நம் கடமை என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்தார்.

மயிலாடுதுறையில் ராஜன் தோட்டம் சாய் விளையாட்டு மைதானத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை இணைந்து நடத்தும் \”பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் வட்டார அளவில் பள்ளி மாணவிகளுக்கான கபடி போட்டியை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற விழிப்புணர்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்மூலம் அரசானது பெண் குழந்தைகளை பாதுகாத்து அவர்கள் கல்விக்கு ஊக்கத்தினை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசானது பெண் கல்வியை ஊக்குவிக்க புதுமைப்பெண் திட்டம்.

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சமூகநலத்துறை சார்பில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வளரும் பருவத்தில் திருமண பாரம் வேண்டாம். குழந்தை திருமணத்தை ஆதரிப்பதும், நடத்தி வைப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும். குழந்தை திருமண தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 அல்லது 1091 அல்லது 181 என்ற எண்ணையும் அழைக்கலாம்.

அல்லது மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், 3/264 குமரன் தெரு, சீனிவாசபுரம் மயிலாடுதுறை மாவட்டம் தொலைபேசி எண்-04364-212429, என்ற எண்ணையும் அழைக்கலாம்.

உங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும். தனிப்பட்ட இடத்திலோ அல்லது பொது இடத்திலோ வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் ஆதரவை ”சகி” என்ற ஒருங்கிணைந்த சேவை மையத்தின் மூலம் பெறலாம்.

வன்முறையால் பாதிக்கப்ட்ட பெண்களுக்கு சட்டரீதியான உதவிகளையும், மருத்துவ ரீதியான உதவிகளையும், காவல்துறை ரீதியான உதவிகளையும், உளவியல் ரீதியான ஆலோசனைகளையும் ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் பெறலாம்.

தொடர்புக்கு மகளிர் உதவி மைய 181- அழைக்கலாம். ஒவ்வொரு குழந்தையின் பாதுகாப்பினை உறுதி செய்திட, அனைத்து காவல் நிலையத்திலும் குழந்தை நேய பாதுகாவலர் உங்களுக்காக காத்திருக்கிறார். பெண் குழந்தைகள் நம் கண்கள். தன்னம்பிக்கையும், வீரமும் ஊட்டி பாதுகாப்பது நம் கடமை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.கபடி போட்டியில் மயிலாடுதுறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மணல்மேடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கூறைநாடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் 5 பிரிவுகளாக விளையாடினர்.இந்நிகழ்வின்போது, மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர். மாவட்ட சமூகநல அலுவலர் சுகிர்கர தேவி, தாசில்தார் விஜயராணி ஆகியோர் உடன் இருந்தனர்.

The post தன்னம்பிக்கையும், வீரமும் ஊட்டி பெண் குழந்தைகளை பாதுகாப்பது நம் கடமை appeared first on Dinakaran.

Read Entire Article