தன்னம்பிக்கையுடன் தோற்றமும் முக்கியம்!

3 hours ago 3

வயதாகாமல் எப்போதும் இளமையாக இருக்கவே அனைவரும் விரும்புவர். ஆனால் வயதாவதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் சில முயற்சிகளை தேற்கொண்டால், இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம் அதற்கான சில எளிய குறிப்புகள் இதோ.

சன்ஸ்கிரீன்

அக்காலத்தில் பெரும்பாலும் பெண்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் இருந்தக் காரணம், மேலும் தூய்மையான காற்று, ஆரோக்கியமான உணவு போன்ற பழக்கங்களால் நம் சருமமும் பெரிய மெனெக்கெடல் இல்லாமலே ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் இன்றைய காலம் அப்படி அல்ல அடிக்கும் வெயில், பெருகி விட்ட வண்டிகளால் உண்டாகும் தூசி, புகை இவற்றிலிருந்து சருமத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம். சன்ஸ்கிரீன் சூரிய ஒளி மற்றும் வெப்ப அலைகளில் இருந்து முகச் சருமத்தைக் பாதுகாக்க இதைக் காட்டிலும் சிறப்பான கவசம் வேறு இல்லை. எனவே பெண்கள் வெளியே செல்லும் போது மறக்காமல் சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும். எஸ்.பி.எப் 30க்கு மேல் உள்ள சன்ஸ்கிரீனை பயன்படுத்துவதில் கவனமாக இருங்கள். அதே போல் நீர் சார்ந்தது, கனிம அடிப்படையிலானது என இரண்டு வடிவங்களில் சன்ஸ் கிரீன் வருகிறது. உங்கள் சரும நிறத்துடன் பொருத்தக் கூடிய டின்ட் சன்ஸ்கிரீனை பயன்படுத்தலாம்.

இயற்கையான உணவு

பழங்கள், காய்கறிகளை அதிக அளவில் சாப்பிடுவது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். அதிலும் குறிப்பாக வைட்டமின் சி நிறைந்த நல்ல இளமையான சருமத்தை பராமரிக்க உதவும். சுருக்கங்களை தடுப்பதிலும், சருமத்தின் பொலிவை தக்க வைப்பதிலும் இது மிகவும் நன்மை தரும். எனவே, ஆரஞ்சு, அவகோடா மற்றும் புரொக்கோலி அனைத்தையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதிகமான தண்ணீர் அருந்துதல் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் உதவுகிறது. சர்க்கரை பானங்களை தவிர்ப்பது ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். புரதம் நிறைந்த உணவுகளை தொடர்ந்து உட்கொள்வது, தோல் தசைகளை வலுப்படுத்தும். இது சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கவும், இளமையை பராமரிக்கவும் உதவுகிறது.

முக மசாஜ்

தினமும் ஏதேனும் ஒரு எண்ணெயைக் கொண்டு அல்லது மசாஜ் க்ரீம்கள் கொண்டு சருமத்தை, குறிப்பாக முகத்தை மசாஜ் செய்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இது சரும செல்களுக்கு போதுமான ஆக்ஸிஜனை வழங்குகிறது. தோல் நல்ல நிறத்தைப் பெறவும், சுருக்கங்களை நீக்கவும், சருமத்தை இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது. இல்லையேல் உடற் பயிற்சிகளில் கொடுக்கப்பட்டும் முக மசாஜ்கள் கூட முக வடிவமைப்பையே மாற்றக் கூடிய அளவிலான மசாஜ்கள் இன்று இணையத்திலேயே ஏராளமாக உள்ளன. இவற்றை தொடர்ந்து செய்யும் போது இரட்டை தாடை, கன்னங்களில் அதிக சதை, சுருக்கங்கள் நீங்கி முகம் சீக்கிரம் தொய்வடைந்து வயோதிக தோற்றம் பெருவதைக் குறைக்கும்.

ஈரப்பதம்

சருமத்தை நன்கு ஈரப்பதத்துடன் வைத்திருப்பது அவசியம். இல்லை யென்றால் சருமம் வறண்டு, பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல், நம் சருமத்துக்கு ஏற்ற ஏதேனும் பேக்கேஜ், கொஞ்சம் செலவழிக்கத் தயார் எனில் ஒரு எளிமையான ஃபேசியல் இவை எல்லாமே சரும இரத்த ஓட்டங்களை சீராக்கி, கருமை அடைவது, முங்குதல், திட்டுகள், வயது மூப்பு அறிகுறிகளில் இருந்து பாதுகாக்கும்.

தூக்கம்

நல்ல ஆரோக்கியத்துக்கும், வளமான சருமத்துக்கும் தூக்கம் அவசியம். போதுமான தூக்கம் இல்லை என்றால், சருமத்தில் சுருக்கங்களும், கரும்புள்ளிகளும் தோன்றும். எனவே தூக்கம் முக்கியமானது. குறிப்பாக முகப்பரு, கருவளையம், வறட்சி, இவை எல்லாமே தூக்கமின்மை காரணமாக வருபவை. அதிக புளிப்பு, காரம் மற்றும் இனிப்பு உணவுகளை சாப்பிடுவது சரும ஆரோக்கியத்துக்கு நல்ல தல்ல.செரிமான பிரச்னைகள் உண்டாக்கும் உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது, குறிப்பாக இரவில் முழுமையாக ஒதுக்கவும். ரசாயனங்கள் கொண்ட தோல் பராமரிப்பு பொருட்களை தவிர்க்கவும். முடிந்தவரை இயற்கையான பொருட்களை பயன்படுத்தி உங்கள் சருமத்தை கவனித்துக் கொள்ளுங்கள். இவையெல்லாம் வயதை தாண்டிய இளமை அழகை உங்களுக்கு கொடுக்கும்.

நேர்மறை எண்ணங்கள்

என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்கிற நேர்மறை எண்ணங்கள் மிக அவசியம். இதுதான் நம்மை முதலில் ஆரோக்கியமாக வைத்திருக்கும் முதல் வழி. நண்பர்களுடன் பயணம், அடிக்கடி சந்திப்புகள், குடும்பத்துடன் ஒரு சின்ன பயணம், கோவில் சுற்றுலா, என இப்படி முடிந்தவரை நம்மை தனிமையில் இருந்து விடுவித்து நேர்மறையான சிந்தனைகளுடன் வைத்திருந்தாலே ஆரோக்கியம் நிச்சயம். உடன் கூட்டாக உடற்பயிற்சி, நடைபயிற்சிகளும் கூட தனியாக செய்வதைக் காட்டிலும் நல்ல முன்னேற்றம் கொடுப்பதாக ஆய்வுகள் உள்ளன. அதற்கு பழகலாம். அக்கம் பக்கத்தாருடன் நட்பு பாராட்டல், நடந்த நல்லவைகளை அதிகம் சிந்தித்தலும் கூட நம்மை இளமையாக வைத்திருக்கும் வழிகள்தான். நல்ல தோற்றமே நமக்கு 100% க்கு 60% தன்னம்பிக்கைக் கொடுத்துவிடும்.
– அ.ப.ஜெயபால்.

The post தன்னம்பிக்கையுடன் தோற்றமும் முக்கியம்! appeared first on Dinakaran.

Read Entire Article