தனுசு ராசி முதலாளிகளின் முதலாளி

3 weeks ago 5

யோகக்காரர்

தனுசு ராசி குருவின் ராசியாகும். குரு போகத்தின் அதிபதி. புத்திரகாரகன். தனகாரகன். உலக இன்பங்களை அள்ளித் தருபவன். பாக்கியம் என்று சொல்லக் கூடியவற்றை எல்லாம் வழங்கும் அதிகாரம் உடையவன். இவற்றை தனுசு ராசி முதலாளிகளுக்கு குருபகவான் ஏராளமாக அள்ளித்தருவார். குரு மங்கள யோகம், குரு சந்திரயோகம், கஜ கேசரி யோகம், சிவராஜ யோகம் உள்ளவர்கள் முதலாளிகளாக இருப்பார்கள். சிவராஜயோகம் உடையவர்கள் அரசுத்துறையில் இருப்பார்கள்.

சிறந்த பணியாள்

தனுசு ராசியில் முதலாளி சிறந்த தொழிலாளியாகவும் இருப்பார். ஒரு தொழிலாளி வரவில்லை என்றால், அவருடைய வேலையை இவர் இருந்து செய்து முடிப்பார். ஆள் இல்லாமல் வேலை அரைகுறையாக நிற்பதை இவரால் தாங்கிக் கொள்ள முடியாது. இவருக்கு வேலை முக்கியமே தவிர, தன்னுடைய கௌரவம் முக்கியம் கிடையாது. இவரே ஒரு சிறந்த பணியாளராக இருந்து, அந்த வேலையைச் செய்து முடித்து, சொன்ன நேரத்தில் பொருளை டெலிவரி செய்வார்.

தொழில் கற்பிக்கும் குரு

தனுசு ராசி முதலாளி, திமிரானவர்தான். ஆனால், தன் திமிரை பணியாட்களிடம் காட்ட மாட்டார். இவர் நகைச்சுவை உணர்வு மிக்கவர். உள்ளத்தில் கபடம் கிடையாது. எனவே, வேலையை நல்ல முறையில் பணியாளுக்குக் கற்றுக் கொடுப்பார். இவர் தனக்குத் தொழில் கற்றுக் கொடுத்த குரு என்று வாழ்நாள் முழுக்க பலர் இவரை நன்றியோடு நினைவு கூர்வர்.

நுண்ணறிவுடைய பணியாள்

தனுசு ராசி முதலாளி, பணியாட்களைத் தெரிவு செய்யும்போது, தன்னுடன் விவாதிக்கத்தக்க நுண்ணறிவு படைத்தவர்களாகத் தெரிவு செய்வார். தன்னுடைய எதிர்காலத் திட்டங்களை அவர்களுடன் மனம் விட்டுக் கலந்து பேசுவார். முதலாளி என்ற பந்தா இவரிடம் இருக்காது. எந்த வேலையையும் பணியாளர்களோடு சேர்ந்து சந்தோஷமாகச் செய்வார். இவர் தன்னுடைய வேலையைப் பற்றி நண்பர்களிடமோ, குடும்பத்தினரிடமும், உறவினர்களிடமோ விவாதிக்க மாட்டார்.

சிறந்த நிர்வாகி

தனுசு ராசி முதலாளி, எந்தச் சூழ்நிலையையும் கையாளும் திறன் கொண்டவர். இவர் பலருக்கும் தொழில் கற்றுக் கொடுப்பவராகவும், வழிகாட்டுகின்றவராகவும், ஊக்கம் அளிப்பவராகவும் விளங்குவார். இவரிடம் பணி செய்தவர்கள், பின்பு முதலாளிகளாக உருவெடுப்பார்கள். யாரையும் நீ எதற்கும் லாயக்கில்லை. நீ உருப்பட மாட்டாய் என்று சொல்லமாட்டார். பணியாட்களைவிட்டு தன்னை விலக்கி வைத்துக் கொள்ள மாட்டார். அல்லும் பகலும் பணி செய்யும் தனுசு ராசி முதலாளி, தன்னைப் போலவே பணியாட்களும் தமக்கென சொந்த வாழ்வின்றி கம்பெனியில் கிடையாகக் கிடக்க வேண்டும் என்று விரும்புவார். பணியாட்கள் விடுப்பு, விடுமுறை எனக் கேட்டால் இவருக்குப் பிடிக்காது. அவர்கள் அந்த நிறுவனத்தை தங்களுடைய சொந்த நிறுவனமாக நினைத்து அல்லும் பகலும் அயராது பாடுபட வேண்டும் என்று விரும்புவார். அவர்கள் சொந்த காரியங்களுக்காக விடுமுறை கேட்டாலும், அல்லது கேட்காமலே விடுப்பு எடுத்துக் கொண்டாலும், இவர் மனதில் வன்மமும் வெறுப்பும்
வந்துவிடும். `என் வீட்டில் விசேஷம் வருகிறது. ஆனால் நான் விடுமுறை எடுக்கப் போவதில்லை’ என்று பணியாள் சொன்னால், `இல்லை.. இல்லை.. நீ விடுப்பெடுத்துக் கொண்டு போய் பொறுப்புடன் செயல்படு’ என்று இவரே விடுமுறை கொடுப்பார். அவ்வாறின்றி, தனக்கு விடுமுறை எடுக்க உரிமை இருப்பதாக சொல்லி விடுமுறை எடுத்துக் கொண்டால், இவருடைய வெறுப்புக்கு ஆளாக நேரிடும்.

விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்

நேர்மை, நீதி, ஒழுக்கச் செருக்கு, ஞானச்செருக்கு மிகுந்த தனுசு ராசி முதலாளி எப்போதும் தனக்கென்று ஒரு தன் வழி அது தனி வழி என்று செயல் படுவார். தனக்கொரு நீதி பிறருக்கு ஒரு நீதி என்றுதான் இருப்பார். பிறர் தவறு செய்தால் கடுமையாக விமர்சிப்பார். ஆனால், தான் தவறு செய்ய நேரிட்டால் அது ஏதோ சந்தர்ப்பவசமாக நேரிட்டது என்றும் அதைப் பற்றி பிறர் எவரும் நேரடியாகவோ, வெளிப்படையாகவோ, குறிப்பாகவோ பேசக் கூடாது என்பதில் கவனமாகவும், கண்டிப்பாகவும் இருப்பார்.

வேலையா? குடும்பமா?

தனுசு ராசி முதலாளிகள் பெரும்பாலும் குடும்பத்தோடு அதிகம் ஒட்டியிருக்க மாட்டார்கள். இவர்களுக்குக் குடும்பப் பிடிப்பு குறைவு. தனி நபர்களாகவே இருப்பார்கள். மனைவி, மக்கள், சுற்றத்தினர் என்று பெரிய குடும்பம் இருந்தாலும், இவர்கள் அதில் தாமரை இலை தண்ணீர் போல இருந்து கொண்டு, தங்கள் பணித்தளத்தில் அதிக நேரத்தை செலவிடுவார்கள். அதனால், அங்கு பணியாற்றுகின்றவர்களும் குடும்பத்துக்காக அதிக நேரம் செலவழிக்க கூடாது. பணித்தளத்திலேயே அதிக நேரத்தை செலவிட வேண்டும் என்று விரும்புவார்கள்.

பலதரப்பட்ட நண்பர்கள்

உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்கும் தனுசு ராசி முதலாளிகள் அனைவரோடும், நட்புணர்வுடன் பழகுவார்கள். இவர்களுடைய நண்பர்களாக அனைத்து தரப்பினரும் இருப்பார்கள். அரசியல் தலைவர் முதல் ஆட்டோக்காரர் வரை எல்லோரையும் இவர் தன்னுடைய நட்பு வட்டத்தில் வைத்திருப்பார். அதனால் இவருக்கு ஏ டு இஸட் (A to Z) டாப் டு பாட்டம் (top to bottom) பல விஷயங்கள் தெரிந்திருக்கும். இந்த உலக அறிவு இவருக்குள் பெரிய அளவில் ஞானச் செருக்கை உருவாக்கும்.

போராட்டம், பணி நிறுத்தம் இல்லை

தனுசு ராசி முதலாளிகள், எந்த வேலையையும் சந்தோஷமாக செய்வார்கள். எடுத்த வேலையை முடிக்காமல் வீட்டுக்குப் போக மாட்டார்கள். குடும்பமா, வேலையா என்றால் இவர்களுக்கு வேலைதான் முக்கியம். இவருடைய பணியிடம் இவர் காட்டும் ஈடுபாட்டின் காரணமாக மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும். பணியாளர்களுக்குள் தகராறு, சண்டை, சச்சரவு, கோபதாபங்கள், வெறுப்பு, போராட்டம், பணி நிறுத்தம் போன்றவை நடக்க வாய்ப்பில்லை. எந்த அதிருப்தி பணியாளர்களிடம் காணப்பட்டாலும், உடனே அவர்களை அழைத்துப் பேசித் தீர்த்து விடுவார். அன்றைக்கு அவர்களோடு விருந்து சாப்பிட்டு மகிழ்ந்து
கொண்டாடுவார்.இவரிடம் வேலை கற்றுக் கொண்டு, தனி நிறுவனம் தொடங்கி முதலாளியான பலரும் இவரை “எங்க முதலாளி, தங்க முதலாளி’’ என்று நன்றியோடு குறிப்பிடுவார்கள். இவர் முதலாளிகளின் முதலாளி.

முனைவர் செ.ராஜேஸ்வரி

The post தனுசு ராசி முதலாளிகளின் முதலாளி appeared first on Dinakaran.

Read Entire Article