சென்னை: கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான 25 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கையை உடனடியாக துவங்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் போது, ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வசிக்கவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கோவை மறுமலர்ச்சி இயக்கத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் 25 சதவீதம் இடஒதுக்கீட்டின் கீழ் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் இணையதளத்தின் வாயிலாக மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கப்படும். பின்னர் மே 20ம் தேதி மாணவர் சேர்க்கை முடிவடைந்துவிடும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சேர்க்கை தொடங்கப்படவில்லை என்பதால் இந்த திட்டம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழகத்தை பொறுத்தவரைக்கும் கடந்த 15 ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வந்த நிலையில் இந்த ஆண்டு உடனடியாக மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை மனுவில் முன்வைத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் மாணவர்களின் நலனை பாதுகாப்பதில் தமிழக அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. மனுதாரர் இதை சொல்லிதர வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் மனுவுக்கு பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என்றும் ஒரு கோரிக்கையும் அவர் முன்வைத்தார். அதை எற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்துள்ளனர். அதற்குள் பதில் மனு தாக்கல் செய்திருக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
The post தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.