கோவை: கோவையில் வீட்டின் கேட்டில் உள்ள இரும்பு வளையத்தில் தலை சிக்கிய நாய்க்குட்டியை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். கோவை சிங்காநல்லூரை அடுத்த நஞ்சப்பாநகரில் பாரதி என்பவருக்குச் சொந்தமான வீடு உள்ளது. இன்று அதிகாலை அந்த வீட்டின் கேட்டின் அருகே வந்த நாய்க்குட்டி ஒன்று, கேட்டில் இருந்த இரும்பு வளையத்திற்குள் தலையை விட்டு சிக்கிக்கொண்டது. மீண்டும் அதனால் தலையை வெளியே எடுக்க முடியாமல் பரிதவித்தது. அதன் அருகிலேயே அந்த நாய்க்குட்டியின் தாயும் தனது மற்ற குட்டிகளுடன் வந்து செய்வதறியாது திகைத்து நின்றது.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் முதலில் அதற்கு உணவு கொடுத்து ஆறுதல்படுத்தினர். பின்னர் அதனை கேட்டின் வளையத்தில் இருந்து வெளியே எடுக்க முயன்றனர். ஆனால், நாய்க்குட்டி முரண்டு பிடித்தது. இதனால் பொதுமக்களால் குட்டியை மீட்க முடியவில்லை. தொடர்ந்து, இதுகுறித்து பொதுமக்கள் பீளமேடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் நிலைய அலுவலர் ரவிக்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு வந்து, கிளவுஸ் அணிந்து, மெதுவாக அதன் தலையை வெளியே தள்ளி கேட்டில் சிக்கியிருந்த குட்டி நாயை பத்திரமாக மீட்டனர்.
கேட்டில் இருந்து வெளியேறிய குட்டி நாயிடம், ‘‘ஓடுடா… அங்க பாருடா உன் அம்மா…’’ என்று அப்பகுதி மக்கள் கூறியதும், நாய்க்குட்டி தனது தாயிடம் ஓடிச்சென்றது. கேட்டில் சிக்கி சுமார் 1 மணி நேரமாக தவித்த நாய்க்குட்டியை மீட்ட தீயணைப்புத்துறையினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
The post கோவையில் வீட்டின் கேட்டில் இரும்பு வளையத்தில் சிக்கி தவித்த நாய்க்குட்டி: பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை appeared first on Dinakaran.