தனியார் கம்பெனி மூலம் வெளியேறும் நச்சு புகையால் பொதுமக்கள் அவதி: நடவடிக்கை எடுக்கக்கோரிக்கை

1 week ago 2

காஞ்சிபுரம்: வெங்காடு ஊராட்சியில் தனியார் கம்பெனி மூலம் வெளியேறும் நச்சுப் புகையினால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாவதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஞ்சி மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம், ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் மனு அளித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன், நேற்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், வெங்காடு ஊராட்சியில் தனியார் கம்பெனி நிறுவனத்தில் இருந்து தினமும் நச்சு புகை காற்றுடன் வெளியேறி வருகிறது. இதனால், பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் குளத்தில் புகை படர்ந்து குடிநீர் மாசு ஏற்பட்டுள்ளது. இந்த, நச்சு புகையினால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கண் எறிச்சல், சுவாச பிரச்னைகள் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

இத்தொழிற்சாலையில் பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்றத்தின் சார்பாக பலமுறை மனுக்களும், நேரிடையாகவும் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து, நச்சு புகையை கட்டுப்படுத்த தனியார் கம்பெனி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து அருகில் உள்ள தொழிற்சாலையில் இருந்தும் ஊராட்சி மன்றத்திற்கு புகார் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து ஊராட்சி மன்றத்தில் தீர்மாணம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகவே, இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மேற்கண்ட நிறுவனத்தில் இருந்துவரும் புகையினை ஆய்வு செய்து, புகை வெளிவராமல் தடுக்க நடவடிக்கை எடுத்து தங்கள் ஊராட்சி மன்றத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

The post தனியார் கம்பெனி மூலம் வெளியேறும் நச்சு புகையால் பொதுமக்கள் அவதி: நடவடிக்கை எடுக்கக்கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article