கர்நாடக மாநிலத்தில் போலீஸ் அதிகாரியாக இருந்தவர் அண்ணாமலை. அப்போது, அம்மாநில மக்களை தன்வசப்படுத்தும் வகையில் நான் ஒரு ஒரிஜினல் கன்னடன், கன்னடன் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார். திடீரென பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழ்நாடு பாஜவில் சேர்ந்தார். உடனடியாக அவருக்கு மாநில துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. அந்நேரத்தில் பாஜ தலைவராக இருந்த எல்.முருகன், ஒன்றிய அமைச்சராகப்பட்டார். காலியாக இருந்த பதவிக்கு அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இதனால் பாஜ தலைவர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.
ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர், மக்களுக்கு சேவை செய்யும் அரசியல்வாதி போல இல்லாமல், போலீஸ் அதிகாரியாக செயல்படத் தொடங்கினார். எதைச் சொன்னாலும் மக்கள் நம்பும்படியாக இருக்க வேண்டும் என்பதற்காக வாய்க்கு வந்ததையெல்லாம் அதிரடியாக கூறினார். இவரது பேச்சை கேட்ட மக்கள் நம்பத்தொடங்கினர். இதனை தெரிந்து கொண்ட அவர், கர்நாடகாவில் பணியாற்றிய போது 2 லட்சம் எப்.ஐ.ஆர்.பதிவு செய்தேன் என்றார். ஐ.பி.எஸ். அதிகாரி என்பவர் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய மாட்டார்கள். அரிதான, மிகுந்த சவாலான வழக்கை மட்டும் எப்.ஐ.ஆர்.பதிவு செய்து விசாரணை நடத்துவார்கள். அந்த மாநிலத்தில் பதிவு செய்த அனைத்து வழக்குகளையும் தானே பதிவு செய்ததாக ஒரு பொய்யான தகவலை தெரிவித்தார். இதை அரசியல் கட்சியினர் கிண்டிலத்தனர். நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வறுத்தெடுத்தனர்.
இதன்பின்னர், 20 ஆயிரம் புத்தகத்தை படித்தேன் என இன்னொரு புதுக்குண்டையும் உருட்டி விட்டார். அவர் பிறந்த முதல் நாளில் இருந்த கணக்கு போட்டாலும் கூட 15 ஆயிரம் தாண்டாது. புத்தகம் படிக்க ஒரு குறிப்பிட வயது வேண்டும். ஆனால், அண்ணாமலை 20 ஆயிரம் புத்தகங்களை படித்ததாக தெரிவித்தார். இதுவும் பொய் என தெரியவந்தது. இவ்வாறு எதையாவது சொல்லி மக்கள் தன்னைப்பற்றியே பேச வேண்டும் என்பதில் அவருக்கென புதிய பாதையை வகுத்துக்கொண்டார். நான் ஒரு நேர்மையான அதிகாரி என தனக்கு தானே சொல்லும் அண்ணாமலை, அவர் கையில் கட்டியிருந்த பல லட்சம் மதிப்புள்ள ரபேல் கைக்கடிகாரத்தை எங்கு வாங்கியது என்ற கேள்விக்கு பதில் அளிக்கவில்லை.
அதே போல மாதம் தோறும் வழங்கப்படும் வீட்டுவாடகை பல லட்சத்தை எனது நண்பர்கள் செலுத்துகிறார்கள் என்றார். பல லட்சத்தை வழங்கும் அந்த நண்பர்கள் யார்? என்ற கேள்விக்கும் அவரால் பதில் அளிக்க முடியவில்லை. நண்பர்களிடம் வீட்டு வாடகைக்கே கையேந்தும் ஒருவர் எப்படி நேர்மையான அதிகாரியாக இருக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்தது. இதனால் அவர் பேசுவது எல்லாமே பொய்யாகவே இருந்ததை பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்தனர். வரலாற்றை கூறுவதாக நினைத்துக்கொண்டு பொய்யான தகவலை தெரிவித்து மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார்.
மறைந்த தலைவர்களை அவதூறாக பேசுகிறார். நீட் பிஜி சீட் எண்ணிக்கை, 30 லட்சம் மாணவர்கள் தமிழ்நாட்டில் இந்தி படிக்கிறார்கள் என வாய்க்கு வந்த படி நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாக அவர் பொய்யான தகவலை தெரிவிப்பது வாடிக்கையாக இருந்து வருகிறார். என் வாழ்க்கையில் கட்சி அலுவலகத்தை தவிர வேறு எங்கும் பேட்டி அளிக்க மாட்டேன் என்றார். ஆனால் போகிற இடமெல்லாம் ஊடகங்களில் தினமும் ஏதாவது ஒரு பேட்டி கொடுத்து தன்னை முன்னிலை படுத்தி கொள்கிறார். பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஒரு புள்ளி விவரத்தை அடித்து விடுவார். அதை சரி பார்த்து நிருபர்கள் கேள்வி கேட்டால் உங்களுக்கு அதை பற்றி என்ன தெரியும் என்று கேட்பார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம் என டெல்லி மேலிடத்தில் தெரிவித்து, அவர்களை ஏமாற்றி அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவினார். இதனால் டெல்லி மேலிடம் அண்ணாமலை மீது அதிருப்தியில் இருந்து வருகிறது. அவரது பதவியை பறித்து வேறு ஒருவருக்கு கொடுக்க திட்டமிட்டது. அந்த அதிருப்தியை திசை திருப்பும் வகையில், தனக்கு தானே சவுக்கால் அடித்துக்கொண்டார். இனிமேல் செருப்பு அணியப்போவது இல்லை என்ற சபதமும் எடுத்தார். இந்நிலையில் தற்போது புதிய முடிவையும் அவர் கையில் எடுத்துள்ளார். அதன்படி தான் செல்லும் இடங்களுக்கு கட்சி நிர்வாகிகள் அனைவரும் வந்துவிட வேண்டும். அவ்வாறு வரும்போது பெரும் கூட்டம் இருப்பதுபோல தன்னை நெருக்கி தள்ளிக்கொண்டு வரவேண்டும்.
அனைவரும் செல்போனில் புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதுதானாம். இவ்வாறு செய்வதன் மூலம் தனக்கு தமிழ்நாட்டில் பெரும் செல்வாக்கு இருப்பதுபோல கட்சி தலைமைக்கு காட்டிக்கொள்ள வேண்டும், தான் இல்லை என்றால் கட்சி இல்லை என சொல்வதன் மூலம் தனது தலைவர் பதவியை தக்கவைத்துகொள்ள வேண்டும் என்பது தான் அவரது திட்டமாக இருப்பதாக கட்சியினர் கூறி வருகின்றனர். சேலத்தில் 2 நாட்களுக்கு முன் நடந்த திருமணவிழாவில் இதுபோன்ற காட்சிகளும் அரங்கேறியது. அதேபோல யாரைப்பற்றி பேசினால், தலைமை உடனே தன்னை உற்றுநோக்கும் என்பதை தெரிந்து கொண்டு அருவறுக்கத்தக்க வகையில் பேசி வருவதாகவும் அனைத்து அரசியல் தலைவர்களும் கூறி வருகின்றனர். எத்தனை நாள் தான் அவர் இந்த நாடகத்தை நடத்தப்போகிறாரோ என கட்சியினரே கூறி வருகின்றனர்.
The post அண்ணாமலையின் அரசியல் நாடகம்: பொய் சொல்றோமோ பீலா விடுறோமோ முக்கியமில்ல.. எது பண்ணாலும் உலகமே என்னை உத்துப்பாக்கணும்… appeared first on Dinakaran.