தந்தையின் கல்லறைக்கு சென்று விஷம் குடித்து போலீஸ்காரர் தற்கொலை

2 hours ago 3


கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே சூரியகோடு வாச்சியாவிளை பகுதியை சேர்ந்தவர் சம்பத் சந்திரா (வயது 38). கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்த இவருக்கு அருள்சோனி (வயது 36) என மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் இரண்டு வயதில் இரட்டை பிறவிகளாக ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில், சம்பத் சந்திரா கடந்த 24-ந் தேதி களியக்காவிளை அருகே வாறுத்துட்டு பகுதியில் உள்ள தனது தந்தையின் கல்லறையில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனே அவரை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சம்பத் சந்திரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த களியக்காவிளை போலீசார், சம்பத் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சம்பத் சந்திரா, சோதனை சாவடிக்கான பணியில் ஈடுபட தயாரானதாகவும், அந்த சமயத்தில் சம்பத் சந்திரா திடீரென விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. தந்தையின் கல்லறை தோட்டத்தில் போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Read Entire Article