தண்ணீர் பேரலில் மூழ்கடித்து 5 மாத குழந்தையை கொன்றது ஏன்? - தாய் பரபரப்பு வாக்குமூலம்

8 hours ago 1

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே கண்ணங்குடியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31). இவரது மனைவி லாவண்யா (20). இவர்களுக்கு ஆதிரன் என்ற 5 மாத ஆண் குழந்தை இருந்தது. கணவன்-மனைவி இடையே குழந்தை பிறந்த நாளிலிருந்து அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் காண்பித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் லாவண்யா குழந்தையுடன் புலியூரில் உள்ள அவரது தாய் பொன்னருப்பு (42) வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 6-ந் தேதி இரவு வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் லாவண்யா கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறித்து கொண்டு, குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றதாக கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தேடி பார்த்தனர். அப்போது வீட்டின் அருகில் இருந்த தண்ணீர் பேரலுக்குள் மர்மமான முறையில் இறந்த நிலையில் குழந்தை கிடந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் லாவண்யா, மணிகண்டன், பொன்னருப்பு ஆகியோரிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். விசாரணையில் லாவண்யா குழந்தையை கொன்றதை ஒப்புக்கொண்டார். பின்னர் போலீசாரிடம் லாவண்யா பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

அதில், கணவர் என் மீது அன்பாக இல்லாமல் குழந்தை மீது அதிக பாசம் காட்டி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த நான் குழந்தையை தண்ணீர் பேரலுக்குள் அமுக்கி கொலை செய்து விட்டேன். மேலும் 7 பவுன் தாலி சங்கிலியை வீட்டில் மறைத்து வைத்தேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து அந்த நகையை போலீசாரிடம் அவர் எடுத்துக் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாவண்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற தாயே குழந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

Read Entire Article