கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சித்தலவாய் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான இவர், நேற்று காலை 6.15 மணியளவில் ரயில் தண்டவாளம் அருகே நடந்து சென்றார். அப்போது மாயனூர் -சித்தலவாய் ரயில் நிலையங்கள் இடையே திருக்காம்புலியூரில் கரூர்-திருச்சி ஒரு வழி ரயில் பாதை தண்டவாளத்தில் லேசான விரிசல் ஏற்பட்டிருப்பதை கண்டு மாயனூர் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே, எர்ணாகுளத்தில் இருந்து காரைக்காலுக்கு வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரிசல் ஏற்பட்ட இடத்துக்கு 100 மீட்டர் தூரத்துக்கு முன் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் கலியமூர்த்தி, ரயில்வே ட்ராக் மேனுடன் சேர்ந்து சிவப்பு கொடியை அசைத்து ரயிலை நிறுத்தினர்.
உரிய நேரத்தில் ரயில் நிறுத்தப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அந்த நேரத்தில் வரக்கூடிய வாஸ்கோடகாமா- வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மாயனூர் ரயில் நிலையத்திலும், கரூர்- திருச்சி பயணிகள் ரயில் மாயனூருக்கு முன் நடுவழியிலும் நிறுத்தப்பட்டன. தண்டவாள விரிசல் சரி செய்யப்பட்ட பின்னர் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக அந்த வழியாக புறப்பட்டு சென்றன.
The post தண்டவாளத்தில் திடீர் விரிசல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தப்பியது appeared first on Dinakaran.