நாகை: தடை காலம் முடிந்து கடலுக்கு சென்ற நாகை விசைப்படகு மீனவர்கள் இன்று காலை கரை திரும்பினர். அதிகளவில் மீன்கள் கிடைத்ததாலும், உரிய விலைக்கு மீன்கள் விற்கப்பட்டதாலும் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மீன்களின் இனப்பெருக்கத்துக்காக தமிழகத்தில் ஏப்ரல் 14ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி நள்ளிரவு வரை மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்படும். அதன்படி இந்தாண்டு மீன்பிடி தடைகாலம் கடந்த 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைந்தது. 15ம் ேததி மீன் பிடிக்க செல்வதற்காக நாகை மாவட்ட மீனவர்கள் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் கடல் சீற்றம் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை அறிவித்ததால் மீனவர்கள் மீண்டும் வீடுகளில் முடங்கினர்.
கடலில் சீற்றம் குறைந்ததால் நாகை மாவட்டத்ைத சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடந்த 16ம் தேதி இரவு கடலுக்கு சென்றனர். ஆழ்கடலில் மீன் பிடித்த நாகையை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களின் வலைகளில் வஞ்சிரம், வாவல், கனவா, பாறை, நண்டு, இறால் ஆகியவை அதிகளவில் சிக்கியது. இதையடுத்து நாகை மீன்பிடி துறைமுகத்துக்கு இன்று அதிகாலை மீனவர்கள் திரும்பினர். நாகை மீன்பிடி துறைமுகத்தில் தயாராக இருந்த வியாபாரிகள் கொடுவா, வாவல், வஞ்சிரம், கனவா, இறால், நண்டுகளை போட்டி போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர். இதேபோல் பொதுமக்களும் அதிகளவில் மீன்களை வாங்கி சென்றனர்.
வாவல் கிலோ ரூ.1,000, வஞ்சிரம் ரூ.1,500, பாறை ரூ.450 முதல் ரூ.500, நண்டு ரூ.600 முதல் ரூ.650, இறால் ரூ.600 முதல் ரூ.700 வரை விலை போனது. இதேபோல் கடல்விரா ரூ.650 முதல் ரூ.700 வரை, விலை மீன் ரூ.600, கொடுவா ரூ.550, சங்கரா ரூ.350, நெத்திலி ரூ.300க்கு விற்பனையானது. மீன்களுக்கு உரிய விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
The post தடைகாலம் முடிந்து கடலுக்கு சென்ற நாகை மீனவர்கள் வலையில் அதிகளவில் சிக்கிய மீன்கள்: உரிய விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.