ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு தனித்திறன் கட்டாயம் இருக்கும். அது எது என்பதை கண்டறிந்து அந்த தனித்திறனை மேலும் வளர்த்துக்கொண்டு தனித்துவமாக ஒரு செயலை நிகழ்த்திக்காட்டும்போது அது சாதனையாக அனைவராலும் பாராட்டப்படுகிறது. சாதனை என்ற சொல்லைக் கேட்கும்போதும், உச்சரிக்கும்போதும் சற்று பிரமிப்பாக தான் இருக்கும். இவர் சாதனையாளர், இவர் இந்த சாதனை செய்துள்ளார் என்று பிறரிடம் பேசும்போதும், பகிர்ந்து கொள்ளும்போதும் நம்மை அறியாமலே அவர் மீது மதிப்பும், மரியாதையும் ஏற்படத்தான் செய்யும். உதாரணமாக மலை உச்சியிலும், சிகரங்களின் உச்சியிலும் ஏறுவது சாதனையாக கொள்ளப் படுகிறது. இந்த சாதனைகள் அத்தனையும் எளிதில் கிடைத்து விடுமா என்ன? மலை ஏறுவதற்கான பயிற்சிகள் வேண்டும்.இந்த பயிற்சிக்கு நமது உடலும் உள்ளமும் ஒத்துழைக்க வேண்டும். அதன் பின்னரே மலையின் உச்சியை அடைய முயற்சிக்க வேண்டும்.
மலை உச்சியை அடைந்து விட்டால் சாதனை படைத்துவிட்டதாக அர்த்தமா? என்று கேட்டால்… அதுதான் இல்லை. ஏனென்றால் அதற்கு முன்பே பலரும் மலை உச்சியினை அடைந்து பல சாதனைகளை புரிந்திருக்கிறார்கள். இத்தனை நாட்கள், இத்தனை மணி நேரம், இத்தனை நிமிடங்கள், இத்தனை நொடிகள் என்று அவர்களின் சாதனையின் நேரம் வரையறுக்கப்பட்டு இருக்கும். அந்த நேரத்திற்கு ஒரு நிமிடம் முன்னதாகவோ அல்லது ஒரு நொடி முன்னதாகவோ நாம் மலை உச்சியினை அடைந்திருந்தால் அது சாதனையாக ஏற்றுக் கொள்ளப்படும். முந்திய சாதனை முறியடித்ததாக வரலாற்றில் பொறிக்கப்படும்.
சிலர் தங்கள் வாழ்நாளையே சாதனை மேடையாக்கிக் கொண்டிருப்பார்கள். உதாரணத்திற்கு கடலுக்குள் முத்து எடுப்பவர்களை சொல்லலாம். இப்படி வாழ்வின் ஒவ்வொரு நாளையும் சாதனையாகவே மேற்கொள்ளும் பலரும் இந்த உலகில் இருந்துகொண்டு தான் இருக்கின்றார்கள். நாம் முடியாது, முடியாது என்று சொல்லக்கூடிய ஒவ்வொரு விஷயத்தையும் இந்த உலகத்தில் ஏதாவது ஒரு மூலையில் யாராவது ஒரு நபர் முடியும் முடியும் என்று சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்கு உதாரணமாக இந்த சாதனை பெண்மணியை சொல்லலாம். ஏழ்மையான சூழலில் பிறந்து, வளர்ந்து, கல்வியின் மூலமாக மேம்பட்டு உயர்பதவியை அடைந்து சாதனைப் பூவாக ஜொலித்து கொண்டு இருப்பவர் தான் அன்சல் கங்வால்.
வாழ்வில் சந்தித்த தடைகளை எல்லாம் தகர்த்து எரிந்து சாதித்த சாதனை பெண் தான் மத்தியப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த அன்சல். இவரின் தந்தை சுரேஷ் கங்வால் அங்குள்ள கிராமத்தில் டீ கடை நடத்தி வந்தார். இவரது மகள் அன்சல் தான் தற்போது இந்திய விமானப்படையில் ஃப்ளையிங் அதிகாரியாக பதவி ஏற்றுள்ளார். சமீபத்தில் இந்திய விமானப்படையில் சேர்ந்துள்ள இவரது வெற்றிபயணம் அவ்வளவு எளிதானதல்ல. என் மகள் விமானப்படையில் இணைந்துள்ளது பெருமைமிக்க தருணமாகும். ஆனால் அவர் பதவி ஏற்பதை எங்களால் பார்க்கமுடியவில்லை. லாக்டவுன் காரணமாக விமானப்படை மையத்திற்கு எங்களால் செல்லமுடியவில்லை, என்கிறார் அன்சலின் தந்தை சுரேஷ் கங்வால்.
அன்சலுக்கு சிறு வயது முதலே இந்திய விமானப்படையில் சேர வேண்டும் என்ற விருப்பத்தில் இருந்து வந்துள்ளார். அதன் பிறகு அதை தனது இலக்காக மாற்றிக் கொண்டார். அவரின் குடும்பத்தினருக்கு அவரின் கனவை நனவாக்குவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. ஆனால், அன்சல் தன் முடிவில் திடமாக இருந்தார். பள்ளியிலும்,கல்லூரியிலும் தனது கல்வியை சிறப்பாக மேற்கொண்டார். அதனால் அன்சல் படிப்பிலும்,விளையாட்டிலும் சிறந்து விளங்கி பல பரிசுகளை பெற்றார். தன்னுடைய கிராமத்தில் நடந்த வெள்ள பாதிப்பின்போது இந்திய விமானப்படையின் வீரச்செயலை பார்த்த அன்சல் கங்வால் வியப்பில் ஆழ்ந்தார். விமானப்படை வீரர்களின் வீரதீர செயல் அன்சலின் மனதில் ஆழப்பதிந்துவிட்டது. அப்போதே விமானப்படையில் சேர முடிவெடுத்தார்.
அன்சல் விமானப்படையில் சேர அதற்கான தேர்வுக்கு தயாரானார். நூலகத்திற்குச் சென்று அதற்கான புத்தகங்களை எடுத்து படிக்க ஆரம்பித்தார். தீவிரமாக முயற்சி செய்து,சிறந்த பயிற்சியுடன் 6வது முறையாக தேர்வு எழுதி விடா முயற்சியுடன் வெற்றியை ஈட்டினார். கடந்த 25 ஆண்டுகளாக டீக்கடை நடத்தும் சுரேஷ்,பணப்பிரச்னையால் பலமுறை தவித்துள்ளார். அதனால் அன்சலில் பள்ளி மற்றும் கல்லூரி கட்டணத்தை செலுத்த முடியாமல் கடன் வாங்கியுள்ளார். அத்தகைய சூழலில் விமானப்படையில் உயர் பதவியை அடைந்து தனது குடும்பத்தின் சூழலை மாற்றி உள்ளார் அன்சல். அன்சலின் இந்த வெற்றியை பார்த்து, மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த அன்சல் இன்று இந்திய விமானப்படையின் விமானத்தில் உயரப் பறந்துகொண்டு இருக்கிறார். வறுமையான சூழலை தடையாக கருதாமல், அதை வாய்ப்பாக மாற்றிக்கொண்டு சாதித்து உள்ளார் அன்சல். வறுமை என்பது வெட்கத்துக்குரியது அல்ல, அது வெல்வதற்கான ஒரு தூண்டுகோல் என்பதுதான் அன்சல் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது. எந்தத் தடைகளையும் எதிர்கொள்ள தயாராக இருப்பவர்களாலேயே சாதனைகளை புரிய முடியும். இதை ஆழ்மனதில் ஆழமாக பதிய வைத்துக் கொண்டு, புதிய உத்வேகத்துடன் கிளம்புங்கள். இவரைப் போல நீங்களும் சாதனைகளைப் படையுங்கள். இன்னும் நிறைய சாதனை பூக்கள் இந்த உலகில் மலரட்டும்.
The post தடைகளை எதிர்கொள்பவர்களே சாதனையாளர்கள்! appeared first on Dinakaran.