சென்னை: “மன்னார் வளைகுடா பகுதி மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக தெற்கு பகுதியில் இந்தியப் பெருங்கடல் நோக்கிச் செல்வதற்கு வழிவகை செய்யும்பொருட்டு, தங்கச்சிமடம் பகுதியில் 150 கோடி ரூபாய் செலவில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் துவங்கும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு மீனவர் நலன் தொடர்பாக, சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விதி 110-ன்கீழ் அறிவித்து பேசியதாவது: “தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்க, கடந்த ஏப்.2ம் தேதி அன்று தமிழக சட்டமன்றத்தில் மீனவர்கள் பிரச்சினை குறித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம். அப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.