
நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். தொடர்ந்து மாநில மாநாடு, நிர்வாகிகள் நியமனம் ஆகியவற்றை நடத்தி கட்சியை வலுப்படுத்தினார். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் களம் இறங்குவதற்கு ஆயத்தமாகி வருகிறார். இந்த சூழலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் பேசிய விஜய், "2026-ம் ஆண்டு தமிழ்நாடு இதுவரை சந்திக்காத ஒரு வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். இரண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று த.வெ.க. இன்னொன்று தி.மு.க." என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களை உற்சாகப்படுத்த விஜய் அவ்வாறு பேசியுள்ளார் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் விஜய்யின் பேச்சு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:-
அவருடைய கருத்தை அவர் கூறியிருக்கிறார். நாட்டில் எல்லா கட்சித் தலைவர்களும், கட்சி வளர்வதற்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் அவ்வாறு கருத்து சொல்வார்கள். அ.தி.மு.க.வை பிரதான எதிர்க்கட்சி என்று மக்கள் ஒத்துக் கொண்டுள்ளனர். அதற்கான அங்கீகாரமும் கொடுத்துள்ளனர். இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து த.வெ.க. பொதுக்குழு கூட்டத்தில் பா.ஜ.க., தி.மு.க.வை கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால் அ.தி.மு.க.வை பற்றி பேசவில்லை. மேலும் அ.தி.மு.க. தலைவர்களை பெருமையாக பேசியுள்ளனர். இதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "எங்கள் தலைவர்கள் அப்படி இந்த நாட்டை ஆண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சியில் இருப்பவர்கள், புதிதாக கட்சி தொடங்குகிறவர்கள் எல்லாரும் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா" என்று கூறினார்.