‘எனக்காக இருக்கறது இவன் ஒருத்தன்தான். இவனையும் வித்துட்டு நான் தனிமரமா என்ன செய்யப் போறேன்’ ?… இந்த வார்த்தைகளின் ஆழம் விளங்கும் பொழுது கதை துவங்கு கிறது. இரண்டாம் உலகப்போரில் முற்றிலுமாக சேதமடைந்த மற்றும் பஞ்சத்தில் வாடுகிற தெற்கு இத்தாலி. தொடர் குண்டுகளால் உயிர் வாழ்வதே பெரும் போராட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக எலிகளை பிடித்து உண்கிறார்கள். இதற்கிடையில் ஒரு பக்கம் மிகவும் அமைதியாகவும் பணக்காரர் மக்கள் வாழும் வடக்கு இத்தாலி தெற்கு இத்தாலியில் இருக்கும் குழந்தைகளை பாதுகாக்கவும் அவர்களுக்கு வாழ்வாதாரம் கொடுக்கவும் முன் வருகிறார்கள். இவை அத்தனையும் 1945 முதல் 1952 ஆம் வருடம் வரையிலும் நிகழ்ந்த உண்மையான வரலாற்று சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கற்பனையான இரு தாய்களின் கதைதான் ‘த சில்ட்ரன்’ஸ் டிரெய்ன்‘ . 1946 தெற்கு இத்தாலியில் நேபிள்ஸ் நகரம். குறும்புத்தனம் நிறைந்த அமெரிக்கோ (கிறிஸ்டியன் செர்வோன்) தனது அம்மா ஆண்டனியேட்டாவின் (செரினா ரோஸி) பேச்சை கேட்காத துறுதுறு சிறுவனாக சேதமடைந்த சாலை களில் சுற்றித் திரிகிறான். பொறுப்புடன் நடந்து கொள் என அம்மா திட்டி போய் பழைய துணிகள் இருந்தால் வாங்கிட்டுவா என்கிறார். கூடையுடன் அவனும் அவனது தோழனும் சாலைகளில் பழைய துணி என கத்திக்கொண்டே செல்ல எங்கெங்கோ இருந்து அவர்களுக்கு துணிகள் விழுகின்றன. அதை கொண்டு வந்து வீட்டில் சேர்த்ததும் அடுத்து எலிகளைப் பிடித்துக்கொண்டு வீட்டிற்கு வரும் பொறுப்பு என படிப்பும் எந்த வாழ்க்கை நோக்கமும் இல்லாமல் பொழுதுகள் கழிகின்றன.
‘ இதற்கிடையில் இருக்கும் ஒரு மகனை விற்றுவிட்டு நீ நிம்மதியான வாழ்க்கையை வாழ்‘ என மூளைச்சலவை செய்கிறார்கள் ஊரில் உள்ள கம்யூனிச அதிகாரிகள். ஆனால் அதிக பணபலம் படைத்த வடக்கு இத்தாலி மக்கள் குழந்தைகளை வேகவத்து உண்பது அவர்களின் வழக்கம். அதற்குத்தான் நம் குழந்தைகளை கொண்டு செல்கிறார்கள் என்னும் வதந்தியும் பிரச்சாரமும் ஆங்காங்கே நிகழ்கிறது. இன்னொரு புறம் வெள்ளை எலிகளை மக்கள் காசு கொடுத்து வாங்குவதைப் பார்க்கும் அமெரிக்கோவும் அவனது நண்பனும் கருப்பு எலியை பிடித்து அதற்கு கலர் அடித்து விற்க முயற்சிக்கிறார்கள். அவர்களின் கெட்ட நேரம் மழை பெய்து வண்ணங்கள் நீரில் கரைய அவர்களின் தந்திரம் வெளிப்பட்டு விடுகிறது. ஊரே ஒன்று இணைந்து அடித்து துவைக்க இதையெல்லாம் பொறுத்துக் கொள்ளமுடியாமல் ஒரு கட்டத்தில் அமெரிகோவை விற்றுவிடலாம் என முடிவு செய்கிறார் அவனது தாய். அமெரிகோ அவனது நண்பர் மேலும் அமெரிகோவின் சிறுமி தோழி என அனைவரும் இந்த பயணத்தில் அடக்கம்.
‘என்னுடைய சகோதரர்கள் இருவரும் பட்டறையில் வேலை செய்கிறார்கள். பெண் பிள்ளையான என்னால் எந்த உதவியும் இல்லை என என்னுடைய அப்பா என்னையும் விற்க முடிவு செய்துட்டார்’ என்னும் அமெரிகோவின் சக சிறு தோழி சொல்லும் போது நமது உள்ளமும் சற்றே உருகும். அமெரிகோவிற்கு புதிய ஷூ என்றால் அவ்வளவு விருப்பம். ஷுவின் அடிப்பகுதியைக் கொண்டே ‘0,1,0’ எனக் கணக்கிட்டுக்கொண்டே இருப்பான். அங்கே சென்றால் விதவிதமான உடைகள் மற்றும் புதிய ஷூ கிடைக்கும் என்கிற கனவுகள் ஒரு பக்கம் இன்னொரு புறம் நம்மை வேகவைத்து திங்கப் போகிறார்கள் என்னும் பயம் ஒரு பக்கம் என இரு வேறுபட்ட மனநிலையில் குழந்தைகள் கிளம்புகிறார்கள். ரயில் பயணிக்க துவங்கிய நேரத்தில் ஒவ்வொரு குழந்தையும் தங்களது சகோதர சகோதரிகளுக்கு உதவட்டும் என தங்களது அன்னையிடம் உடுத்தியிருக்கும் புதிய கோட்டுகளை கழட்டி வீசுகிறார்கள். அழுது கொண்டேன் அமெரிகோவின் தாய் உட்பட அத்தனை தாய்மார்களும் கண்ணீர் சிந்த நிற்கிறார்கள். சொந்த நாடு, பெற்றவர்கள் என அத்தனையும் இழந்து ஏதோ தமக்கு நல்லது நடக்கும் என்கிற சிறு நம்பிக்கையுடன் ரயிலில் பயணிக்கத் தொடங்குகிறார்கள் குழந்தைகள். அங்கே அத்தனை குழந்தைகளுக்கும் பிரம்மாண்ட வரவேற்பு, நல்ல உணவு கொடுக்கப்படுகிறது. முதலில் குழந்தைகள் இது விஷமாக இருக்கலாம் என சாப்பிட மறுக்கிறார்கள். அங்கே இருக்கும் மேலதிகாரி சாப்பிட்டு காண்பித்தவுடன் அத்தனை குழந்தைகளும் நீண்ட வருடங்களாக எதையும் சாப்பிடாமல் இருந்ததால் ஆர்வமாக சாப்பிடும் பகுதி அதுவரையிலும் கூட கண்கலங்காத எவரும் நிச்சயம் அந்த இடத்தில் கண்ணீர் சிந்துவர்.ஒவ்வொரு குழந்தையாக தம்பதிகள் அழைத்துச் செல்ல, இருப்பதிலேயே சற்று பெரியவனாக இருக்கும் அமெரிகோவை தனியாக இருக்கும் பெண்மணி டெர்னா அழைத்துச் செல்கிறார். போகும் வழியில் பல உறுதிகளையும் கொடுக்கிறார்.
‘உனக்கு நல்ல பணக்கார அப்பா அம்மா மற்றும் பெரிய குடும்பம் உன்னை கூட்டிச்செல்லும்‘ என நினைத்திருப்பாய், ஆனால் நீ என்னிடம் வந்திருக்கிறாய். என் வீட்டில் நான் மட்டுமே , என்னுடையது சின்ன வீடு தான். நீ விருப்பப்பட்டால் அங்கே இருக்கலாம் இல்லையேல் திரும்பிச் செல்லலாம்’ என்கிறார். அமெரிகோவிற்கு ஏமாற்றம் தான் என்றாலும் தொடர்ந்து நல்ல உணவு, பள்ளியில் படிக்கும் வாய்ப்பு, புதிய துணிகள், ஷூ இவையெல்லாம் கிடைக்கிறது. குறிப்பாக அவனுக்குப் பிடித்தபடி கறி உணவுகள், பிரெட் கிடைக்கிறது. தன் பழைய நண்பர்கள் உட்பட ஒன்றிணைந்து மே தின கொண்டாட்டம் என வாழ்க்கை வசந்தமாக அமெரிக்காவிற்கு நகர்கிறது. இதற்கிடையில் அமெரிகோவிற்கு ஒரு வயலின் குருவின் நட்பும் கிடைத்து அவனது பிறந்தநாள் பரிசாக புதிதாக உருவாக்கப்பட்ட வயலினும் அன்பளிப்பாக கிடைக்கிறது. தொடர்ந்து வயலின் பயிற்சியும் எடுத்துக்கொள்கிறான் அமெரிகோ. வாழ்வாதாரம் திரும்பும் வரையிலும் இந்த குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் வடக்கு இத்தாலி மக்கள் போர் முடிந்து நகரம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிய போது குழந்தைகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம். ஒப்பந்தப்படி மீண்டும் குழந்தைகள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். நான் உனக்கு அடிக்கடி கடிதம் எழுதுகிறேன் நீயும் விருப்பப்பட்டால் எனக்கு கடிதம் எழுதலாம் என பிரிய முடியாமல் அமெரிகோவை பிரிந்து செல்கிறார் வளர்ப்புத் தாய் டெர்னா.
வீடு திரும்பிய அமெரிகோவிற்கு அப்போதுதான் விளங்குகிறது தான் எப்படிப்பட்ட வாழ்வில் வாழ்ந்திருக்கிறோம். தன் வீட்டில் எதுவுமே இல்லை . தான் மீண்டும் நரகத்திற்குள் தள்ளப்பட்டு விட்டதாக உணர்கிறான். அதற்கேற்பவே அன்னையும் அவனை கண்டது முதல் எரிந்து விழுந்து, அவன் கொண்டு வந்த எதையும் பற்றி பெரிதாக ஆர்வம் காட்டாமல் குப்பையில் வீசுகிறார். வயலினையும் தொடக்கூடாது என கட்டளையிட்டு கட்டிலுக்கு அடியில் தள்ளப்படுகிறது. தொடர்ந்து அன்னையின் வெறுப்பு தனது நல்ல வாழ்க்கை பறிக்கப்பட்ட ஏமாற்றமும் ஒன்றிணைந்து அமெரிகோவிற்கு தெற்கு இத்தாலி வாழ்க்கை பிடிக்காமல் போகிறது. காலங்கள் ஓட அவனுடன் ஊர் வந்து சேர்ந்த நண்பர்களுக்கு நிறைய கடிதங்களும் புதிய பெற்றோர்களிடம் இருந்து வீட்டுக்கு தேவையான உணவுப் பொருட்களும் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அமெரிகோவிற்கு தன் புது அன்னையிடம் இருந்து கடிதமும் வரவில்லை உணவுப் பொருட்களும் எதுவும் வராமல் இருக்க இரண்டு தாய்களுக்குமே தன்னை பிடிக்கவில்லை என நினைத்து மன உளைச்சலுக்கு ஆளாகிறான். ஒரு கட்டத்தில் உண்மையை தெரிந்து கொள்ள கம்யூனிச அலுவலகத்திற்குச் செல்லும் அமெரிகோ தன் புது அன்னை அனுப்பி வைத்த கடிதங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் குறித்த அத்தனை தகவல்களையும் தெரிந்து கொண்டு தன் சொந்த தாய் ஆண்டனியெட்டாவிடம் சண்டை இடுகிறான்.
நீ ஒரு பொய் சொல்லி என்னிடம் அத்தனையையும் மறைத்து விட்டாய் என சண்டையிட்டுவிட்டு இரவோடு இரவாக கடிதத்தில் இருக்கும் முகவரியுடன் ரயிலில் ஏறி மீண்டும் தனது புதிய அன்னையிடம் வந்து சேர்கிறான் அமெரிகோ. எதையோ இழந்து சுற்றிக்கொண்டிருந்த டெர்னா தன்னைத் தேடி வந்த அமெரிகோவைப் பார்த்தவுடன் ஓடி வந்து கட்டி அணைத்துக் கொள்கிறார். இரு தாய்மார்களின் வார்த்தைகளும் அவ்விடத்தில் நம்மை மனதை கனமாக்குகின்றன. ‘ அவன் உன்னிடம் மீண்டும் திரும்பி வந்தால் ஒருவேளை உனக்கு விருப்பம் என்றால் அவனை நீயே வைத்துக் கொள்ளலாம். அவனை தொடர்ந்து வளர்ப்பதற்கு உரிய வசதியோ அல்லது பணமோ என்னிடம் இல்லை’ என்னும் ஆண்டனியேட்டா. ‘ உன்னை வேண்டாம் என ஒதுக்குபவர் நிச்சயம் உன்னை பாதுகாப்பாக வைத்திருப்பவரை விட அதிகம் நேசிப்பவர் ஆக இருப்பார்‘ என்னும் டெர்னாவின் வார்த்தைகள் ஒரு புறம் என இரு தாய்களின் ஒரு மகன் மீதான பாசம் வெளிப்படும் இடம் உண்மையில் உருக்கம். ஆனால் அமெரிகோ வளர்ந்து இளைஞனாக தன் பழைய வீட்டிற்கு திரும்பும் போதுதான் தன் தாயின் தியாகமும், இரு தாய்களின் ஒப்பந்தங்களும் தெரிய வருகிறது. கட்டிலுக்கு அடியில் பாதுகாப்பாக வைத்திருக்கும் வயலினை பார்த்து கதறி அழுகிறார்.
1945 முதல் 1952 வரை ‘த சில்ட்ரன்‘ஸ் டிரெய்ன்‘ அல்லது டிரெயின் ஆஃப் ஹேப்பினஸ் என்னும் பெயருடன் இந்த ரயில் பயணம் அங்கே துவங்கப்பட்டது. போரால் பாதிக்கப்பட்ட ஊரில் இருக்கும் குழந்தைகளை நாட்டின் இன்னொரு புறத்தில் இருக்கும் பணக்காரர்கள் தத்தெடுத்து சில காலங்கள் வளர்த்து அனுப்ப வேண்டும் என்னும் ஒப்பந்தங்கள் முடிவான புதிதில் இந்த ரயில் தெற்கு இத்தாலி நேப்பில்ஸ் நகரத்திலிருந்து கிளம்பி வடக்கு இத்தாலியில் இருக்கும் மொடென்னா நகரம் வரை பயணித்தது. சுமார் 70 ஆயிரம் குழந்தைகளை சுமந்து சென்று இருக்கிறது இந்த ரயில். இதில் அமெரிகோ என்னும் சிறுவனின் கற்பனையான கதாபாத்திரமாக வரலாற்று சம்பவத்தில் பிணைக்கப்பட்ட
கதையாக உருவாக்கியிருக்கிறார் நேபிள்ஸ் நகரை சேர்ந்த எழுத்தாளர் வயோலா அர்டோன். இதனை ‘த சில்ட்ரன்’ஸ் டிரெய்ன்’ என்கிற பெயரில் படமாக உருவாக்கி இருக்கிறார் இத்தாலிய பெண் இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் கிறிஸ்டினா கோமன்சினி.
இக்கதை சொல்லும் உண்மை ஒன்றுதான் இப்போதும் எத்தனையோ தாய்கள் போரில் தனது குடும்பத்தையே இழந்து இருக்கும் ஒன்று, இரண்டு குழந்தைகளை காப்பாற்ற முடியாமல் இன்னமும் உலகம் முழுக்க வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அன்று முதல் இன்று வரை இது ஓய்ந்த பாடில்லை. அப்படி கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும் அத்தனை தாய்மார்களுக்கும் இந்த படம் சமர்ப்பணமாக நிற்கிறது. படத்தின் இறுதியில் உண்மையாகவே 1945 முதல் 1952 வரை சென்ற ரயிலின் புகைப்படங்கள், கண்ணீருடன் குழந்தைகள் தாய்மார்கள், வடக்கு இத்தாலியின் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்புகள் அவர்களின் வாழ்க்கை என அத்தனைப் புகைப்படங்களாக கடந்து செல்லும் பொழுது நம்மையும் மீறி கண்கள் கசிகின்றன. இந்தப் போருக்கும், போராட்டத்துக்கும் இன்னமும் உலகம் இரையாகிக் கொண்டுதான் இருக்கின்றது என்பது மட்டுமே மறுக்க முடியாத உண்மை.
– மகளிர் மலர் குழு.
The post த சில்ட்ரன்’ஸ் டிரெய்ன்! appeared first on Dinakaran.