கோவை: டேட்டிங் ஆப் மூலம் பழக்கம் ஏற்பட்ட சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர்கள் 7 பேரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். கோவையை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பிளஸ்-2 படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்தார். இவரது தாத்தா இறந்து விட்டதால், பாட்டிக்கு துணையாக சிறுமி அதே பகுதியில் உள்ள பாட்டி வீட்டிற்கு இரவில் சென்று தூங்குவது வழக்கம். மறுநாள் தனது வீட்டுக்கு சென்று விடுவார்.
இந்நேரத்தில், சிறுமிக்கு சமூகவலைதளம் மூலம் கல்லூரி மாணவர்கள் இருவரின் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி சாட்டிங் செய்து வந்ததாக தெரிகிறது. செல்போன் எண்களை பகிர்ந்து பேசி வந்தனர். இந்நிலையில், கடந்த 15ம் தேதி (சனிக்கிழமை) பாட்டி வீட்டில் சிறுமி தங்குவதற்காக சென்றார். எதேச்சையாக சிறுமியை பார்க்க அவரது தந்தை அங்கு சென்றுள்ளார்.
அப்போது சிறுமி அங்கு இல்லை. அவரது பாட்டியிடம் கேட்டபோது மாலையில் வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. உறவினர்கள் வீடு, தோழிகளிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து சிறுமியின் தந்தை கோவை மாநகர போலீஸ் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், அதிகாலை 3 மணியளவில் சிறுமியை மாணவர்கள் சிலர் பைக்கில் அழைத்து வந்து பாட்டி வீட்டருகே விட்டு சென்றுள்ளனர். தகவலறிந்து சிறுமியிடம் போலீசார் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில், சிறுமி செல்போனில் டேட்டிங் ஆப் மூலம் ஆண் நண்பர்களுடன் பழகி வந்துள்ளார். அதன்மூலம், நட்பான கல்லூரி மாணவர்கள் 2 பேர் சம்பவத்தன்று பைக்கில் சிறுமியை ஏற்றி ஒரு அறைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மேலும் 5 மாணவர்கள் இருந்தனர்.
7 பேரும் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது சிறுமியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பின்னர் சிறுமி தனது செல்போனை ஆன் செய்தபோது, தந்தை, உறவினர் என ஏராளமான மிஸ்டு கால் இருந்தது. இதனால் பதறிய சிறுமி, மாணவர்களிடம் தன்னை அழைத்து சென்று பாட்டி வீட்டருகே விடுமாறு தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து 2 மாணவர்கள் அவரை பைக்கில் ஏற்றி பாட்டி வீட்டில் இறக்கி விட்டு சென்றுள்ளது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து போலீசார், சிறுமியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் சிறுமியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது கோவை தனியார் கல்லூரி மாணவர்கள் ஜெபின் (20), ரக்க்ஷித் (19), அபினேஷ்வரன் (20), தீபக் (20), யாதவராஜ் (19), முத்து நாகராஜ் (19), நிதீஷ் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவர்கள் 7 பேர் மீதும் போக்சோ வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவர்களை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுமியை அழைத்து சென்று கல்லூரி மாணவர்கள் 7 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
* 7 மாணவிகளிடம் பாலியல் சீண்டல்: 59 வயது ஆசிரியர் சிக்கினார்
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவி ஒருவர், சைல்டு லைனை தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக ஆசிரியர் தொல்லை தருவதாக புகார் தெரிவித்தார். தொடர்ந்து குழந்தைகள் நல பாதுகாப்பு துறை அலுவலர்கள், போலீசாருடன் அந்த பள்ளிக்கு நேற்றுமுன்தினம் சென்று விசாரித்தனர். அப்போது அடுத்தடுத்து மேலும் 6 மாணவிகள் அந்த ஆசிரியரின் அத்துமீறல் குறித்து புகார் தெரிவித்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து திருமயம் மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ஆசிரியர் பெருமாளை (59) நேற்று கைது செய்தனர்.பின்னர் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டார். போக்சோவில் கைதான ஆசிரியர் பெருமாள் அடுத்த ஆண்டு பணி ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post டேட்டிங் ஆப் மூலம் பழக்கம் சிறுமி கூட்டு பலாத்காரம் 7 மாணவர்கள் கைது: போக்சோ வழக்கு பாய்ந்தது appeared first on Dinakaran.