புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உலக நாடுகளிடம் விளக்கம் அளிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்காக அனைத்து கட்சி பிரதிநிதிகள் அடங்கிய 7 குழுக்களை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. இந்நிலையில், வெளிநாடு பயணத்தில் குறிப்பிட வேண்டிய விஷயங்கள் தொடர்பாக 7 குழுக்களில் 3 குழுவில் உள்ள பிரதிநிதிகளுக்கு வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேற்று விளக்கம் அளித்தார். டெல்லியில் நடந்த இந்த சந்திப்பில் ஐக்கிய ஜனதா தள எம்பி சஞ்சய் ஜா, சிவசேனாவின் காந்த் ஷிண்டே, திமுகவின் கனிமொழி ஆகியோர் தலைமையிலான குழுக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
முன்கூட்டிய நிகழ்ச்சிகள் காரணமாக திமுக எம்பி கனிமொழியால் இக்கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. இதில், இந்தியாவின் தாக்குதல்கள் அனைத்தும் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து மட்டுமே நடத்தப்பட்டதாகவும், ராணுவ தளங்கள் மற்றும் பொதுமக்களுக்கு எதிராக அல்ல என்றும் மிஸ்ரி எம்பிக்களிடம் விளக்கினார். அதே சமயம், இந்திய ராணுவ தளங்கள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சித்த பிறகே இந்தியா பதிலடி கொடுத்ததாகவும் அவர் கூறினார்.
இந்த கூட்டத்திற்கு பின் பேட்டி அளித்த ஐக்கிய ஜனதா தள எம்பி சஞ்சய் ஜா, ‘‘உலக தலைவர்களுக்கு எங்கள் செய்தி என்னவென்றால், இத்துடன் போதும். தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து கடந்த காலத்தில் பாகிஸ்தானின் வார்த்தைகளை நம்பியதெல்லாம் போதும். தனது சொந்த குற்றத்தை விசாரிக்க வாய்ப்பு கேட்ட திருடனைப் போல பாகிஸ்தான் செயல்பட்டுள்ளது’’ என்றார். ‘தீவிரவாத சம்பவங்களுடன் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்பு குறித்து உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்’ என சிவசேனா எம்பி காந்த் ஷிண்டே கூறினார்.
The post பாகிஸ்தான் விவகாரம் குறித்து நாடாளுமன்ற குழுக்களிடம் வெளியுறவு செயலர் விளக்கம்: வெளிநாடு பயணத்திற்கான தயார் நடவடிக்கை appeared first on Dinakaran.