‘‘பு திய தலைவருக்கு மஞ்சள் மாவட்ட மலராத கட்சிக்காரங்க பெட்டிசன்களை தட்டிவிட்டுக்கிட்டே இருக்காங்களாமே தெரியுமா..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘மஞ்சள் மாவட்டத்துல மலராத கட்சி புதிய மாவட்ட தலைவர் பதவி கிடைத்த ஆர்வக்கோளாறில் சாதாரண சாக்கடை அடைப்பு பிரச்னைக்குகூட போராட்டம் அறிவிக்கிறாராம்.. தன்னை விளம்பர படுத்திக்கொள்வதற்காக தினந்தோறும் போராட்டம் நடத்தப்படும்னு அறிக்கை விடுவதை மட்டும் வாடிக்கையாக கொண்டிருக்கிறாராம்.. ஆனால், செயல்பாடு ஒன்றும் இல்லைன்னு கட்சிக்காரங்க புலம்புகிறாங்க.. சீனியர்களை மதிக்கிறது இல்லையாம்.. 2026 தேர்தலை மனதில் வைத்து மட்டும் செயல்பட்டு வருகிறாராம்.. அதுக்கு முன்பாக தன்னை அடையாள படுத்தணும்ங்கிறதுல தீவிரமாக இருக்கிறாராம் புதிய மாவட்ட தலைவர். இவரோட தன்னிச்சையான செயல்பாடுகளால் கட்சியில இவருக்கு எதிராக நிறைய பேர் உருவாகிகிட்டு இருக்கிறாங்களாம்.. மலராத கட்சியின் மாஜி தலைவர் மவுண்டனை சரிகட்டி மாவட்ட தலைவர் பதவி வாங்கினாராம்..
மவுண்டன் பதவி இழந்த பிறகும்கூட இன்னும் அவருக்கு ஆதரவாகவே இருக்கிறாராம்.. தன்னோட லெட்டர் பேடில் கூட புதிய மாநில தலைவர் படம் இல்லையாம்.. அதற்கு பதிலா மவுண்டன்தான் காட்சியளிக்கிறாராம்.. இதை கட்சிக்காரங்க புதிய தலைவருக்கு பெட்டிசனா தட்டி விட்டிருக்கிறார்களாம்.. அதோட இல்லாம இவரோட அன்றாட நடவடிக்கைகளை பட்டியலா தயாரிச்சிட்டு வர்றாங்களாம்.. விரைவில் தொகுத்து தலைமைக்கு அனுப்ப திட்டம் போட்டிருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தோட்டத்தில் நடந்த கூட்டத்தில் வெள்ளை காகிதத்தில் கையொப்பம் வாங்கப்பட்டதாக பரவிய தகவலை அன்பானவர் தடாலடியாக மறுத்து விட்டாராமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘பழம் கட்சியில் தந்தை- மகன் இடையே அதிகார மோதல் நிலவும் நிலையில், வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் பழம் இனிக்குமா, கசக்குமா என்ற சலசலப்பு இப்போதே கட்சிக்குள் நிலவுகிறதாம்..
தனது கட்டுப்பாட்டில்தான் கட்சி உள்ளது என்பதை நிரூபிக்க தந்தையானவர் அடுத்தடுத்த கூட்டங்களை கூட்டினாராம்.. அதில் பெரும்பாலானவை கைகொடுக்காத நிலையில்தான் தோற்றுவித்த சங்கம் கைகொடுத்ததாம்.. மெஜாரிட்டி ஆதரவு கிடைக்கவே ஆறுதலடைந்த தந்தை, அடுத்ததாக கட்சியை எப்படி தன்வசமாக்கலாம் என ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளாராம்.. இதனை எதிர்பார்த்த அன்பானவர் அடுத்தகட்டமாக என்ன செய்யலாம்னு தனது முக்கிய ஆதரவாளர்களிடம் தீவிர ஆலோசனையில் மூழ்கி உள்ளாராம்.. இது ஒருபுறமிருக்க, தோட்டத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தின்போது வெள்ளை காகிதத்தில் கையெழுத்து வாங்கப்பட்டதாக தகவல் பரவியதாம்.. இதை மணியானவர் தடாலடியாக மறுத்தாராம்.. கையொப்பம் வாங்கி அன்பான மணியை நீக்கப் போவதாக பரப்பப்படும் தகவல் முழுக்க முழுக்க வதந்தி என முட்டு கொடுத்துள்ளாராம்.. இதுபற்றிதான் புரத்தில் பரவலாக பேச்சு ஓடுகிறது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சியின் கடலோர மாவட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு இடையே உச்சகட்ட பனிப்போர் நடக்கிறதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தில் இலை கட்சியின் இரு முக்கிய நிர்வாகிகளுக்கு இடையேயான பனிப்போர் உச்சகட்டத்தை எட்டியிருக்காம்.. தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் உள்ள நிலையில், தற்போதே ‘சீட்’ வாங்குவதில் அந்த இரண்டு முக்கிய நிர்வாகிகள் போட்டி போட்டு வருகிறார்களாம்.. மேலிடத்தில் தங்களுக்கான ‘பவர் எந்த அளவுக்கு’ உள்ளது என்பதை இதன் மூலம் அவர்கள் ‘பரிசோதித்து’ வருகிறார்களாம்.. கடலோரம் மாநகரில் தனக்கு சீட் வேண்டும் என ஒருவர் தீவிரமாக இருக்காராம்.. அவருக்கு சீட் கிடைத்து விட்டால், நமக்கான பவர் இலைக்கட்சியில் குறைந்து விடும் என மற்றொரு முக்கிய நிர்வாகி நினைக்கிறாராம்.. எனவே, நான் கைகாட்ட கூடிய நபருக்கு சீட் கொடுக்க வேண்டும் என நினைக்கிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கடல் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட இலைக்கட்சி தரப்புக்கு ஆர்வமில்லாததால் பசையுள்ள புதிய ஆட்கள் களம் இறங்க தயாராகி சுற்றி சுற்றி வர்றாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புரம் என முடியும் கடல் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளும் ஆளும்கட்சி வசம் இருப்பதால் வரவுள்ள தேர்தலில் போட்டியிட இலைக்கட்சி தரப்பினருக்கு போதிய ஆர்வம் இல்லையாம்.. இலை கட்சியினருக்கு களம் அவ்வளவாக சாதகமாக இல்லாததால் மாஜிக்கள் மற்றும் நிர்வாகிகள் யாரும் இங்கு களமிறங்க பெரிதாக ஆர்வம் காட்டவில்லையாம்.. இதனால், ‘பசையுள்ள’ புதிய ஆட்கள் இலைக்கட்சி சார்பில் களமிறங்க ஆர்வமாக தயாராகி வருகிறார்களாம்.. அந்த வகையில் குடி என முடியும் தொகுதியை கைப்பற்ற 3 பேரிடையே போட்டி நிலவுகிறதாம்.. அரசு உயர் அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்த ஒருவர் வேட்பாளர் கனவில் உள்ளாராம்..
தனக்கு தான் சீட் என்ற அடிப்படையில் இப்போதே செலவழித்து வருகிறாராம்.. இவருடன் ஏற்கனவே இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திசையை குறிக்கும் சொல்லை முன்பாதியில் கொண்டவரும் தனக்கு தான் சீட் என மீண்டும் சுற்றி சுற்றி வருகிறாராம்.. இவரோடு, குக்கர் பக்கமாய் போய், கதை ஆகாததால் மீண்டும் இலைக்கு திரும்பிய ஒருவரும் சீட் கனவில் காய் நகர்த்தி வருகிறாராம்.. 3 பேரும் சீட் கனவில் சுற்றி வந்தாலும், இந்த முறை எப்படியும் கூட்டணியில் எங்களுக்கு தான் சீட் என மலராத கட்சியினரும் கம்பு சுற்றி வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பழம் பார்ட்டியில பாதர், சன் சண்டையால நிர்வாகிங்க என்ன செய்றதுன்னு தெரியலையேன்னு புலம்பி தவிக்கிறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘பழம் பார்ட்டியோட மா நாடு சமீபத்துல நடந்து முடிஞ்சது.
இந்த மா நாட்டுக்கு முன்னாடில இருந்தே, பழம் பார்ட்டியில பாதருக்கும், சன்னுக்கும் இடையில கருத்து வேறுபாடு எழுந்து வந்துச்சு.. இதை தொடர்ந்து, டிஸ்ட்ரிக் செக்ரட்ரிகள் கூட்டம், பாதர் தலைமையில நடந்துச்சு, ஆனா அந்த கூட்டத்துல சன் கலந்துக்கவே இல்லை. அதோட, பல டிஸ்ட்ரிக் செக்ரட்ரிகளும், சன்னுக்கு ஆதரவாக அந்த கூட்டத்துல கலந்துக்கவே இல்லையாம்.. அதுமட்டுமில்லாம, பழம் பார்ட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துலயும் சன் கலந்துகொள்ளவில்லையாம்.. இந்த நிலையில, வெயிலூர், குயின்பேட்டை, மிஸ்டர் பத்தூர் மாவட்டத்தில உள்ள டிஸ்ட்ரிக் செக்ரட்ரிகள் பலரும் பாதர், சன் சண்டையில, நாம எந்த பக்கம் போகுறதுன்னு தெரியலையேன்னு குழம்பிப்போய் இருக்குறாங்களாம்.. பாதர், சன் சண்டையில பழம் பார்ட்டி ஒன்னும் இல்லாம போய்டும்போல இருக்குதே, இப்படி இருந்தா எப்படி சீட்டு வாங்குறதுன்னு பழம் பார்ட்டி நிர்வாகிங்க புலம்பி தீர்க்குறாங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
The post தந்தை, மகன் சண்டையால் நொந்து போயிருக்கும் பழக்கட்சி நிர்வாகிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.