
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார்.
மேலும் 68 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள விராட் அதில் 40 போட்டிகளை வென்று கொடுத்து இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டனாகவும் வரலாறு படைத்துள்ளார்.
அந்த சூழலில் தற்போது ஓய்வு பெற்றுள்ள விராட் கோலிக்கு பல தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் விராட் கோலியின் மனைவியான அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் உருக்கத்துடன் சில கருத்துகளை பதிவிட்டுள்ளார்.
அதில், ""உங்களின் சாதனைகள், மைல்கல்கள் குறித்துதான் எல்லாரும் பேசுவார்கள். ஆனால் நீங்கள் வெளியே காட்டிக்கொள்ளாத கண்ணீர், யாரும் பார்க்காத போராட்டங்கள், கிரிக்கெட் மீது நீங்கள் கொண்டுள்ள அளப்பரிய காதல் ஆகியவைதான் எப்போதும் எனது நினைவில் நிலைத்து நிற்கும்.
ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்குப் பிறகும், நீங்கள் கொஞ்சம் புத்திசாலித்தனமாகவும், கொஞ்சம் பணிவாகவும் திரும்பி வந்தீர்கள். அதையெல்லாம் கடந்து நீங்கள் முன்னேறுவதை பார்த்தது எனக்கு கிடைத்த பாக்கியம்.
எப்படியோ, நீங்கள் கடைசியில் டெஸ்டில் இருந்துதான் ஓய்வு பெறுவீர்கள் என்று நான் எப்போதும் கற்பனை செய்தேன். ஆனால் நீங்கள் எப்போதும் உங்கள் இதயத்தை பின்பற்றினீர்கள். அதனால் நான் என் அன்பைச் சொல்ல விரும்புகிறேன். இந்த விடைபெறுதலின் ஒவ்வொரு துளி மதிப்பையும் நீங்கள் சம்பாதித்துவிட்டீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.