
லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 'பேஸ்பால்' என்ற தங்களது வழக்கமான அதிரடி பாணியை ஒதுக்கிவிட்டு நிதானத்தை கடைபிடித்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 83 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 251 ரன்கள் அடித்திருந்தது. ஜோ ரூட் 99 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த சூழலில் இன்று 2-வது நாள் ஆட்டம் ஆரம்பமானது.
இன்றைய நாளின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து தொடங்கிய ஜோ ரூட் தனது 37-வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த 5-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் 36 சதங்களுடன் ராகுல் டிராவிட் மற்றும் ஸ்டீவ் சுமித் ஆகியோருடன் 5-வது இடத்தில் இருந்த ஜோ ரூட் தற்போது தனி ஆளாக 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. சச்சின் - 51 சதங்கள்
2. ஜாக் காலிஸ் - 45 சதங்கள்
3. ரிக்கி பாண்டிங் - 41 சதங்கள்
4. குமார் சங்ககாரா - 38 சதங்கள்
5. ஜோ ரூட் - 37 சதங்கள்