
லண்டன்,
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து, 2வது டெஸ்ட்டில் இந்தியாவும் வெற்றிபெற்றுள்ளன. இதனால், 1-1 என்ற புள்ளி கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 387 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஜோ ரூட் அதிகபட்சமாக 104 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் பும்ரா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, இந்தியா தனது முதல் இன்னிங்சை இன்று தொடங்கியது. ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 13 ரன்னில் அவுட் ஆனார். அடுத்துவந்த கருண் நாயர் 40 ரன்னிலும் கேப்டன் சுப்மன் கில் 16 ரன்னிலும் அவுட் ஆகினர். ஆனால், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் அரைசதம் விளாசினார்.
நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது. கேஎல் ராகுல் 53 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ஓக்ஸ், ஜோப்ரா ஆர்சர், பென் ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இங்கிலாந்தை விட 242 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்தியா உள்ளது. 3ம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி நாளை மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.