
மும்பை,
மராட்டிய மாநிலம் பர்பானி மாவட்டம் பூர்ணா பகுதியை சேர்ந்த விவ்சாயி ஜெகநாத் ஹெங்டி. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் தனது மகளை சேர்ந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அந்த பள்ளியில் படித்துவந்த நிலையில் மகளை வேறு பள்ளியில் படிக்க வைக்க ஜெகநாத் நினைத்துள்ளார்.
இதற்காக கடந்த வியாழக்கிழமை மாலை ஜெகநாத் அந்த பள்ளிக்கு சென்றுள்ளார். மகளை வேறு பள்ளியில் சேர்க்க இருப்பதாகவும் ஏற்கனவே செலுத்திய கல்வி கட்டணத்தை திருப்பி தரும்படியும், மகளின் சான்றிதழ்களை தரும்படியும் பள்ளி தாளாளரிடம் ஜெகநாத் கேட்டுள்ளார். அப்போது, செலுத்திய கட்டணத்தை திருப்பி தரமுடியாது எனவும், மாணவி இன்னும் சில கட்டணங்களை செலுத்த வேண்டும் என்று தாளாளரும், அவரது மனைவியும் கூறியுள்ளனர்.
அப்போது, ஜெகநாத்திற்கும் பள்ளி தாளாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் தாளாளரும், அவரது மனைவியும் சேர்ந்து ஜெகநாத்தை சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவத்தில் ஜெகநாத் உயிரிழந்தார். விவசாயி ஜெகநாத் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.